“தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு என தனிக்கட்சி உருவாகப் போகிறது என்கிறீர்கள்… யார்? எப்போது தொடங்கப்போகிறார்கள்?”
“அப்படியொரு கட்சி ஆரம்பிக்கப்படுவதாக நான் கேள்விப்பட்டேன். அதை எண்ணி பெருமைப்படுகிறேன். எல்லா சாதிகளுக்கும் ஒரு கட்சி இருக்கிறது. யாருக்காவது ஓட்டு போட்டு எங்களுக்கு எதாவது செய்வார்கள் என்று நம்பி அலட்சியப்படுத்தப்படுவதுதான் நடக்கிறது. பிராமணர்கள் ஒருங்கிணைந்து பலத்தைக் காட்ட வேண்டுமென்ற முயற்சியில்தான் பிராமணர் கட்சி உதயமாகிறது. ராமதாஸ் அவர்கள் திண்ணைப் பிரசாரம் செய்து எப்படி பாமகவை வளர்த்தாரோ அதேபோல, பிராமணர் கட்சியும் வளரும்.”
“இதனால் தமிழக பா.ஜ.க-வுக்கு பாதிப்பு ஏற்படுமா?”
“அதைப்பற்றி பா.ஜ.க-தான் கவலைப்பட்டிருக்க வேண்டும். பிராமணர்களின் பாதிப்பு எதையுமே தமிழக பா.ஜ.க கண்டுகொள்ளவில்லையே? EWS-க்காக தமிழக பா.ஜ.க என்ன செய்தது? இனிமேல் அண்ணாமலை எவ்வளவு கதறினாலும், பூணூல் போட்டுக்கொண்டு நானும் உங்கவாதான் என்றாலும் அது காமெடியாகத்தான் பார்க்கப்படும்.”
“நீங்கள் சொல்வதுபோல உண்மையிலேயே பிராமணர் கட்சி உருவாகப் போகிறதென்றால், பா.ஜ.க-வை எதிர்த்து அரசியல் செய்யுமா? அல்லது பா.ஜ.க-வுன் கூட்டணி வைக்குமா?”
“இந்த பதிலை அந்த கட்சியை யார் தொடங்கப்போகிறார்களோ, யார் நடத்தப் போகிறார்களோ, அவர்கள் சொல்வார்கள். உங்கள் தலைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்கள் தருகிறோம் என்று தந்தை பெரியார் சொன்னதுபோல, சட்டமன்றத்தில் ஒரு 8 இடங்கள் கொடுக்கிறோம் என பா.ஜ.க கூறினால் பிராமணர் கட்சி அவர்களோடு கூட்டணி வைக்கப்போகிறது, அவ்வளவுதானே.”
“சரி, அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க வளர்ந்திருக்கிறதா? இல்லையா?”
“தி.மு.க தங்களது உறுப்பினர் எண்ணிக்கையை 1 கோடியில் இருந்து 2 கோடியாக அதிகரிக்கப் பாடுபடுகிறது. அ.தி.மு.க ஒன்றரை கோடியை இரண்டரை கோடியாக அதிகரிக்க முயல்கிறது. ஆனால் அண்ணாமலை தலைவரான பிறகு தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி 4%-ல் இருந்து 3.6%-ஆக குறைந்துதான் இருக்கிறது.”
“ஆனால் அண்ணாமலை தலைவரான பிறகு தமிழ்நாட்டில் பா.ஜ.க முன்பில்லாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது என பா.ஜ.க-வினரே கூறுகிறார்களே?”
“தமிழ்நாட்டில் சுமார் 90,000 பூத்-கள் இருக்கின்றன. இவர் வந்த பிறகு எத்தனை பூத்-களில் பா.ஜ.க வளர்ந்திருக்கிறது என்று சொல்வார்களா? இதுவரையில் 7,000 பூத்களில் மட்டும்தான் ஆட்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் 2,000 பூத்களில் மட்டும்தான் 12 நபர்கள் கொண்ட முழு டீம் இருக்கிறது. மற்ற இடங்களில் ஒவ்வொரு பூத்திலும் 2 அல்லது மூவர்தான் இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டுதான் என் பின்னாடி 20 எம்.பி.க்கள் வருவார்கள் என்கிறார் அண்ணாமலை. வெற்றி பெறும் 20 எம்.பி.க்கள் எங்கையாவது நின்றால், அவர்கள் முன்னால் போய் அண்ணாமலை நின்றுகொண்டு ஒரு போட்டோ வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.”
“அண்ணாமலை தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை தமிழக பா.ஜ.க சந்தித்தால் முடிவுகள் எப்படி இருக்கும்?”
“நாடாளுமன்றத் தேர்தல் வரை அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக நீடிப்பாரா என்றே தெரியவில்லையே! எனவே அவர் தலைமையில் தேர்தலை சந்தித்தால் எப்படியிருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது.”