அகமதாபாத் : இதய அறுவை சிகிச்சைகள் மூலம் இதுவரை சுமார் 16,000 நோயாளிகளுக்கு மறுவாழ்வு கொடுத்த பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் கவுரவ் காந்தி, இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி. புகழ்பெற்ற இருதய நோய் மருத்துவரான இவர், நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 41. குஜராத் மாநிலத்தில் பிரபலமான இளம் மருத்துவரான கவுரவ் காந்தியின் மறைவு மருத்துவ உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று முன் தினம் இரவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு, தனது வீட்டுக்கு வந்த டாக்டர் கவுரவ் காந்தி, எப்போதும் போல, சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் காலையில் அவர் எழுந்திருக்கவில்லை. வழக்கமாக காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் கொண்ட கவுரவ் காந்தி, படுக்கையில் இருந்து எழுந்து வராததால், அவரது குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றுள்ளனர்.
ஆனால், அவர் அசைவின்றி கிடக்கவே, உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், டாக்டர் கவுரவ் காந்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உறக்கத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டாக்டர் கவுரவ் காந்தி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கவுரவ் காந்தி தனது மருத்துவ சேவையில் இதுவரை 16,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக இளம் வயதில், அதாவது 41 வயதில் 16 ஆயிரம் பேருக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் கவுரவ் காந்தி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் ஜாம்நகரில் தனது இளநிலை மருத்துவப் படிப்பை மேற்கொண்ட கவுரவ் காந்தி, இதயவியல் மேற்படிப்பை அகமதாபாத்தில் மேற்கொண்டார். பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பிய கவுரவ் காந்தி, இதய நோய் மருத்துவராக திறம்படப் பணியாற்றினார். இதய அறுவை சிகிச்சை நிபுணராக 16 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை செய்து புகழ்பெற்றார்.
மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இதய நோய் மற்றும் மாரடைப்புக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் இதய நோய் பாதிப்புகள் குறித்து அக்கறையுடன் ஆலோசனைகள் கொடுப்பவர் கவுரவ் காந்தி. 16,000 இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட கவுரவ் காந்தி இளம் வயதில் மாரடைப்பால் மரணித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கவுரவ் காந்தியின் அறுவை சிகிச்சைகள் மூலம் உயிர் பிழைத்தவர்கள், இதய நோயாளிகள், சக மருத்துவர்கள் எனப் பலரும் கவுரவ் காந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதய நோய்கள் குறித்தும், மாரடைப்பு குறித்தும் நன்கு அறிந்த மருத்துவரே இளம் வயதில் மாரடைப்பால் பலியாகியுள்ளது, மாரடைப்பு அபாயம் குறித்து அனைவருக்கும் எச்சரிக்கை மணி அடிப்பதாக உள்ளது.