திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்ளை திருடி ஒரிஜினல் ஆர்.சி. புக்குடன் விற்பனை செய்து வந்த இருவர் கையும், களவுமாக பிடிபட்டனர்.
மதுரை பசுமலை பகுதியில் பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் கடையை மணிகண்டன் என்பவர் நடத்தி வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் இவரது கடைக்கு வந்த முருகேசன், அரிகிருஷ்ணன் என்ற இருவரிடம் இருந்து, ‘டியூக்’ பைக் ஒன்றை ஒரிஜினல் ஆர்.சி. புத்தகத்துடன் 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு மணிகண்டன் வாங்கியுள்ளார்.
அந்த பைக்கை விற்பனை செய்ய இணையத்தில் மணிகண்டன் விளம்பரம் செய்தபோது, அது திருடப்பட்ட வாகனம் என தெரியவந்தது.
இந்நிலையில், அதே இரண்டு பேர் ‘யமஹா ஆர் ஒன் ஃபைவ்’ பைக் ஒன்றை விற்க திங்களன்று மீண்டும் மணிகண்டனின் கடைக்கு வந்த போது அவர்களை கையும், களவுமாக பிடித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில், பைக்கை விற்பதாக இணையத்தில் விளம்பரம் செய்யும் நபர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒரிஜினல் ஆர்.சி. புக்கை வாங்கிக் கொள்ளும் இவர்கள், வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடிக் கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.