கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் வேலை வழங்க லஞ்சப் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக 14 நகராட்சிகளில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது.
மேற்கு வங்கத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் வேலை வழங்க பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பானிஹத்தி, கஞ்சரபாரா, சின்சுரா, டம் டம் உள்ளிட்ட 14 நகராட்சிகளில் பணி நியமனம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்த 14 நகராட்சிகளிலும் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள நகர்ப்புற வளர்ச்சித் துறை அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனை குறித்து கருத்து தெரிவித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கிம், “அரசியல் ரீதியாக எதிராக உள்ளவர்களுக்கு எதிராக பாஜக மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கை இது. நியாயமான விசாரணைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், இந்த சோதனை சதியின் ஒரு பகுதி என நாங்கள் நம்புகிறோம். உண்மை வெளிப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் சமிக் பட்டாச்சாரியா, “கொல்கத்தா உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்தச் சோதனையை சிபிஐ மேற்கொள்கிறது. இந்தச் சோதனை ஒரு சதி என திரிணமூல் காங்கிரஸ் கூறுவது அடிப்படை அற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் வேலைவாய்ப்பு கிடைக்காததால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதும், அவர்கள் இந்த சிபிஐ சோதனையால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பதும் ஃபிர்ஹாத் ஹக்கிமுக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.