புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் அமைத்த 5 பேர் கொண்ட விசாரணைக் குழு சிக்னல் பிரச்சனை தான் காரணம் என்று கூறிய நிலையில், அதில் ஒருவர் மட்டும் விபத்துக்கு காரணம் குறித்து மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளார்.
இதனால் விசாரணை குழு அறிக்கையில் கருத்துவேறுபாடு நிலவுவது அப்பட்டமாக தெரிகிறது. ஒடிசாவில் நடந்த பெரும் ரயில் விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளில் அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதை மறைக்க முயற்சிகள் நடக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் ரயில் நிலையத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. அந்த நேரத்தில் அங்கு வந்த பெங்களுருவில் ஹவுரா நோக்கி வந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1000 படுகாயம் அடைந்தனர்.
முதற்கட்டமாக விபத்து குறித்து வெளியான தகவலின் படி, பாய்ண்ட் 17 ஏ மாறாததே இந்த விபத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. மொத்தம் 55 பேர் இந்த விபத்து தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது விபத்துக்கு முன்பாக அந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கியவர்கள் ஊழியர்கள் உள்பட மொத்தம் 55 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
கோரமண்டல் லோகோ பைலட் ஜி.என். மோஹான்டி, துணை லோகோ பைலட் ஹெஜாரி பெஹேரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூரு-ஹவுரா லோகோ பைலட் சித்தரஞ்சன், துணை லோகோ பைலட் சுதீர்குமார் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல் விபத்தில் சிக்கிய சரக்கு ரயிலின் லோகோ பைலட் மற்றும் துணை லோகோ பைலட் மற்றும் பாஹனா பஜார் சிக்னல் பராமரிப்பு பொறியாளர் அவினாஸ் மோகன்ஜி, ஒப்பந்த வயரிங் பணியாளர் ரவீந்திரநாத் தாஸ்மால், உதவியாளர் பிரசாந்த் ராஜூ ஆகியோருக்குதென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்திரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதனிடையே ஜூன் 2 மாலை விபத்து நடந்தவுடன், இந்திய ரயில்வே 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து 24 மணி நேரத்திற்குள் ஆரம்ப அறிக்கையை கோரியது. 288 பேர் உயிரிழக்கவும் 1,000 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்த மோசமான விபத்துக்கு தவறான சிக்னலே காரணம் என்று ஜூன் 3 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்படிருந்தது. ஆனால் ரயில்வே அமைச்சகம் அமைத்த விசாரணை குழுவில் உள்ள ஐந்து பேரில் ஒருவர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்திய ரயில்வேயின் மூத்த செக்ஷன் பொறியாளரான ஏ.கே.மஹந்தா, மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் நேரடியாக முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்ட ஐந்து பேர் அடங்கிய குழுவில் ஒருவர் ஆவார். இந்தக் குழு சமர்ப்பித்த 2 பக்க ஆய்வு அறிக்கையில் சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முதலில், மற்ற நான்கு உறுப்பினர்களின் கருத்துக்களுடன் உடன்பட்டு, 12841 கோரமண்டல் விரைவு ரயில், மெயின் லைன் வழியாக செல்வதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டு, லூப் லைனுக்குள் அந்த ரயில் நுழைந்து அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது என்ற கருத்தினை ஏற்று அந்த அறிக்கையில் கையெழுத்திட்டார். இருந்தபோதிலும் பின்னர் ஆய்வறிக்கையின் கருத்துகளில் இருந்து முரண்பட்டு, தனது மாறுபட்ட இரண்டு கருத்துகளை குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பாயிண்ட் (17A) லூப் லைனுக்காக அமைக்கப்பட்டது என்ற கருத்தைத் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள அவர், டேட்டா லாக்கர் அறிக்கைகளை ஆராய்ந்ததின் அடிப்படையில், அந்த பாயிண்ட் மெயின் லைனுக்காக அமைக்கப்பட்டது. அது ரயில் தடம்புரண்ட பின்னரும் அங்க இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ரயில் தடம்புரண்ட நிகழ்வு லெவல் கிராஸிங் கேட் எண் 94 க்கு முன்பே நடந்துள்ளது. அது, பாயிண்ட் 17(A)க்கு முன்பாகவே அமைந்துள்ளது. அதனால் ரயில் லூப் லைனில் நுழைவதற்கு முன்பாகவே ரயில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது என்பதே அவரது வாதமாக உள்ளது. தனது இந்த மாறுபட்ட கருத்துக்களை ஜூன் 3ம் தேதி அவர், முதற்கட்ட விசாரணை அறிக்கையில் கையெழுத்திட்ட அன்றே பதிவும் செய்திருக்கிறார்.
இதுபற்றி ஊடகம் ஒன்றுக்கு ஏ.கே.மஹந்தா அளித்த பேட்டியில், மெயின் லைன் மற்றும் பாயின்ட்காக சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கும் போது, ரயில் லூப் லைனுக்குள் நுழைந்தது என்ற கருத்தினை ஏற்க முடியாது, இருந்த போதிலும் மெயின் லைனுக்கான சிக்னல் சரிசெய்த பின்னர், பாயின்ட் லூப் லைனுக்கு மாறிய நிகழ்வுகள் நடந்துள்ளன.சிக்னல், ரயிலின் பயணம், மற்றும் தடம்புரண்டது தொடர்பாக தெளிவான விளக்கத்தை டேட்டா லாக்கர் பதிவுகள் கொடுக்கும் என்றார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனுக்குள் நுழைந்து நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதியதா அல்லது முதலில் தடம் புரண்டு, லூப் லைனுக்குள் நுழைந்து நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் மோதியதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும். அதாவது லூப் லைனுக்குள் வந்து சரக்கு ரயிலில் மோதி தடம் புரண்டதா அல்லது தடம்புரண்ட பிறகு வந்த லூப் லைன் ரயில் மீது மோதியதா என்பதை கண்டுபிடித்தால் தான் விபத்திற்கான காரணம் தெரியவரும் என்கிறார்கள்.