புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள ‘அகண்ட பாரத’ சுவரோவியத்துக்கு நேபாளம், பாகிஸ்தான் நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வங்கதேசத்திலும் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
அந்நாட்டு சமூக வலைதளங்களில் அகண்ட பாரத சுவரோவியம் பகிரப்பட்டு இந்தியா அத்துமீறியதாக ஒரு சில விமர்சனங்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் சில ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில், இது தொடர்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகமானது டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் விளக்கம் கோருமாறு இந்தியாவுக்கான வங்கதேச துணை தூதரக்கத்துக்கு வலியுறுத்தியுள்ளது.
முதல் குரல் எழுப்பிய நேபாளம்: கடந்த மே மாதம் 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சுவரோவியத்தால் நேபாளத்தில் சர்ச்சை வெடித்தது. அந்த சுவரோவியத்தில் அகண்ட பாரதம் வரைபடம் தீட்டப்பட்டுள்ளது. அதில் ‘நேபாளத்தின் லும்பினி இந்தியாவில் இருப்பது போல் தீட்டப்பட்டுள்ளது. லும்பினி என்பது நேபாளத்தில் உள்ள புத்தரின் பிறப்பிடம். அதனை இந்தியாவில் இருப்பதுபோல் அந்த சுவரோவியம் காட்டுவதை ஏற்க முடியாது’ என்று நேபாளம் தெரிவித்தது.
புத்தர் பிறப்பிடமான லும்பினியை நேபாளம் தனது கலாச்சார அடையாளமாகப் போற்றுகிறது. ஆனால், அகண்ட பாரதம் என்ற பெயரில் இந்தியா எல்லை மீறியுள்ளதாக நேபாள அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. நேபாளத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானும் எதிர்ப்பு தெரிவித்தது.
வெளியுறவு அமைச்சகம் விளக்கம்: இந்நிலையில், இது குறித்து வெளியுறவு அமைச்சகம் அளித்த விளக்கத்தில், அந்த சுவரோவியம் அசோகர் ஆட்சிக்கு முந்தைய இந்தியாவை குறிப்பிடுவது என்று கூறியது. அதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். அது கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்து இந்தியாவை சுட்டிக்காட்டும் வண்ணம் தீட்டப்பட்டது என்று விளக்கம் நல்கியது.
ஆனால், அதற்குள் வங்கதேச சமூக வலைதளங்களில் அகண்ட பாரத சுவரோவியம் பகிரப்பட்டு இந்தியா அத்துமீறியதாக ஒருசில விமர்சனங்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் சில ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில், இது தொடர்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகமானது டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் விளக்கம் கோருமாறு இந்தியாவுக்கான வங்கதேச துணை தூதரக்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரி ஊடகங்களை சந்தித்தார். அப்போது அவர், “சமூக ஊடகங்கள் மற்றும் சில மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்களை வெளியான இந்தியாவின் புதிய நாடாளுமன்ற சுவரோயத்திற்குப் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை. இதை வைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஏற்கெனவே இந்திய அரசு ஒரு விளக்கம் கொடுத்துள்ளது. இருப்பினும், டெல்லியில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் பெறுமாறு நமது (வங்கதேச) துணை தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.