அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு வர்த்தக சமூகத்தின் பாராட்டு
போட்டித்தன்மையுள்ள பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காணிச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்கள் தொடர்பில் விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என கலாநிதி ஆர். எச். எஸ் சமரதுங்க வலியுறுத்தினார்.
அதற்கான சட்ட வரைபு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நுவரெலியாவில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்வழங்குநரும் பெறுநரும் முன்வைத்த விடயங்களைக் கருத்திற் கொண்டு தற்போதைய வேலைவாய்ப்புப் போக்குகளுக்கு இணங்கக்கூடிய புதிய ஒருங்கிணைந்த சட்டத்தை தொழிலாளர் அமைச்சு தயாரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.08 மணி நேர பணிநேரம் என்ற சம்பிரதாயமான கருத்திற்குப் பதிலாக தற்போதைய தொழில் சந்தைக்கு இணக்கமான நெகிழ்வான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
எனவும் குறிப்பிட்டார்.
உத்தேச சட்டம் உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றப்படும் என்றும் கலாநிதி சமரதுங்க நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தியில் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர் தொழில் சந்தையின் பெண்களின் அதிக பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பில் புதிய சட்டங்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார்
பொருளாதாரத்தை வலுப்படுத்த டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை விரைவுபடுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார். டிஜிட்டல் மயமாக்கலின் நன்மைகளை உணர்ந்து, ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், அதை சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைக்கவும் அரசாங்கம் விரைவான மற்றும் பயனுள்ள திட்டத்தை செயல்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
காணி, தொழில், மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உத்தேச சட்ட திருத்தங்களின் ஊடாக மாறிவரும் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து போட்டியை எதிர்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் நாட்டின் எதிர்கால பயணத்தில் அனைவருக்கும் அபிவிருத்தியை அடையயக் கூடிய பொருளாதாரம் உருவாக்கப்படும் என்றும் சமரதுங்க மேலும் குறிப்பிட்டார்.
2023 தேசிய சட்டத்தரணிகள் மாநாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இலங்கையின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அது தொடர்பில் சட்டத்தரணிகள் சமூகத்தின் பங்கு குறித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் இதன் மூலம் சட்ட வல்லுநர்கள் மற்றும் வர்த்தக சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவதன் ஊடாக நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தேசிய நலன்களாக சுதந்திரமான நீதித்துறையின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து, கருத்தொற்றுமையை கட்டியெழுப்புவது, கூட்டுச் செயற்பாடுகளை கட்டியெழுப்புவது மற்றும் இலங்கையின் எதிர்காலத்திற்கு சாதகமான மாற்றத்தை உருவாக்குவது மாநாட்டின் நோக்கமாகும்.
2023/24 தேசிய சட்ட மாநாடு 2023 ஜூன் 02 முதல் 04 வரை நுவரெலியா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாவது அமர்வில், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பான துறைசார் கருத்துக்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக சமூகத்திடம் இருந்து பெறப்பட்டது.
இவ்வாறான ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக சட்டத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வர்த்தக சமூகத்தினரால் பாராட்டப்பட்டதுடன், நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கத்தின் நேர்மையான முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பணியில் கூடுதலான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்குவதாக வர்த்தக சமூகம் உறுதியளித்தது.
K&L Gates Straits Law LLC (சிங்கப்பூர்) தலைவர் எம். ரு ராஜாராம்
இந்த மாநாட்டில் ஜனாதிபதியின் உரை தொடர்பில் எனக்கு தெளிவு ஏற்பட்டது. அதில் மிகவும் நேர்மையான கருத்துக்களைக் கண்டேன். அந்த பேச்சின் அடிப்படை சாராம்சத்தின்படி அனைவரும் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். முதலீட்டிற்கான மிகவும் கவர்ச்சிகரமான இடமாக இலங்கை இப்போது பேசப்படுகிறது. சிங்கப்பூரில் கூட இது தொடர்பில் கேள்விப்பட்டேன். மேலும், நான் உத்தியோகபூர்வ பணிக்காக இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிற்குச் செல்லும் போது, முதலீட்டிற்கான கவர்ச்சிகரமான இடமாக இலங்கை மாறியுள்ளதாக அறியக் கிடைத்தது.
Gibson,Dunn and Crutcher LLP (Singapore); ஜாய்ஸ் எஸ் பதக்
இலங்கை தனது வெற்றிக்கான பாதையில் பல தடைகளை சந்திக்கலாம். ஆனால் அரசியல் உறுதிப்பாட்டின் ஊடாக அதை முறியடிக்க முடியும். இந்த அழகான தீவு மற்றும் அதன் மக்களின் கனவுகளை நனவாக்க உதவ முடிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
CHEC Port City Colombo (Pvt) Ltd; பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் துள்சி அலுவிஹாரே
இந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு துறைமுக நகரம் முற்போக்கான விதிமுறைகளைக் கொண்டுள்ளது என்பதை முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை எழ வேண்டும். அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு, நாட்டின் உயரதிகாரியான நிறைவேற்று அதிகாரம் தலையிட வேண்டும். எனவே, இத்திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்கு ஜனாதிபதி தலைமை தாங்க வேண்டும்.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சட்டத்துறைப் பிரதானி மற்றும் செயலாளர் நதீஜா தம்பையா,
ஜோன் கீல்ஸ் 150 வருட பழமையான இலங்கை நிறுவனமாகும். நாங்கள் 7 வர்த்தகப் பிரிவுகளில் செயல்படுகிறோம். ஜோன் கீல்ஸில் முதலீடு செய்வது பொதுவாக இலங்கையில் முதலீடு செய்வதாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு பின்னடைவும் நம்மை சீர் செய்யவும் மீள தரப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புகளையும் வழங்குகிறது. இப்பிரச்சினைகளுக்கு கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில் அதற்கான தீர்வுகளை தேடுவதில் நாங்கள் ஈடுபட விரும்புகிறோம். நாங்கள் எவ்வாறு ஒன்றாக வேலை செய்யலாம் என்பதைக் கண்டறிய திறந்த மனதுடன் எங்களுடன் சேருங்கள். முன்னோக்கி செல்லும் பாதை கடினமான போதும் இந்த நாட்டின் வெற்றிக்காக நாங்கள் முதலீடு செய்வோம்.
அமானா வங்கி பிரதான நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர்
இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்யும் சவாலான பணியைக் கொண்டுள்ள முக்கிய தீர்மானம் எடுப்பவர்கள் வர்த்தக சமூகத்திடம் இருந்து ஆலோசனைகளையும் யோசனைகளையும் பெறுவதற்கு இந்த வாய்ப்பை உருவாக்கியதற்காக இந்த மாநாட்டிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
பிரைம் கூட்டு நிறுவனத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மனஹே
நாட்டின் தலைமைத்துவம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் பயணிக்கும் திசை மீது எமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தற்போது பணவீக்கம் குறைவடைந்து வருகிறது. அதேபோல் வட்டிவீதங்களும் குறைவடைகின்றன. இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கடுமையானதும் சிறந்ததுமான தீர்மானங்களினால் இறக்குமதி மீதான தடைகள் குறைவடைந்துள்ளன. உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள் என்ற வகையில் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு எம்மால் பங்களிப்புச் செய்ய முடியும். பொருளாதாரத்திற்கும் ஒத்துழைப்புக்களை வழங்க முடியும். வரிகளையும் செலுத்த முடியும். தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான இயலுமை கிட்டும். செழிப்பை ஏற்படுத்த முடியும் அதனால் எமக்கான ஒத்துழைப்புக்களை வழங்குங்கள். இலங்கையின் தொழில் முயற்சியாளர்கள் என்ற வகையில் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கான அர்பணிக்க தயாராகவே உள்ளோம்.
கெபிடல் மகாராஜா நிறுவனத்தின் இணை. பணிப்பாளர் நிரோ குக்
பாராளுமன்ற எம்.பிக்களில் அதிகமானவர்கள் சட்டத்தரணிகள் ஆவர். அந்த வகையில் இன்று இந்த நிகழ்வில் பங்கெடுக்கும் அனைவரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவர்கள். அதேபோல் இலங்கையை கட்டியெழுப்புவதற்கான கொள்கை ரீதியிலான திட்டமிடல்களை மேற்கொள்ளக்கூடிய இயலுமையும் அவர்களிடத்தில் உள்ளது. வலுசக்தி துறையில் மாத்திரமின்றி அனைத்து துறைகளிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய அனைத்து விடயங்களிலும் உங்களது கடமைகளை நிறைவேற்றுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
லங்கா ஐ.ஓ.சி.பீ.எல்.சீ. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தீபக் தாஸ்
கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்டிருந்த நெருக்கடியான சூழலில் இருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கையின் ஜனாதிபதி, வலுசக்தி அமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் வெளிநாட்டு கையிருப்புக்களுடன் அவசியமான உற்பத்திகளை மேற்கொள்வதற்கான இயலுமை கிட்டியிருக்காது.
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜானக அபேசிங்க
இலங்கையை டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக மாத்திரமே வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்த நாடாக மாற்றியமைக்க முடியும். அதற்காக சட்ட செயற்பாடுகளை டிஜிட்டல் முறைமையுடன் இணைந்ததாக மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும்.
ஹைட்ராமனி கூட்டு நிறுவனத்தின் தலைவர் வினோத் ஹைட்ராமனி, அக்பர் பிரதர்ஸ் கூட்டு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அஸ்கி அக்பர் அலி, ரிசட்சன் கூட்டு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி இமல் பொன்சேகா உள்ளிட்டவர்களும் இங்கு கருத்து தெரிவித்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கணகேஸ்வரன், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பைசர் முஸ்தபா, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இலங்கை வங்கித் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, உயர் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட சட்டத்துறை வல்லுநர்கள் பிரபல வர்த்தக நிறுவன உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.