இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் இன்னமும் ஓயவில்லை. குக்கிகளின் பழங்குடிகள் பட்டியலில் மைத்தேயி மக்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. மணிப்பூர் வன்முறைகளில் இதுவரை 98 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மைத்தேயி மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் முகாமிட்டு அமைதி முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனாலும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை. மணிப்பூரில் மைத்தேயி இன மக்களுக்கு எதிராக குக்கி மக்கள் இப்போது ஆயுதங்களை கையில் எடுத்துள்ளனர். மணிப்பூர் காவல்நிலையங்களை சூறையாடி ஆயுதங்களை கைகளில் எடுத்துள்ளனர் குக்கி இன மக்கள். கடந்த சில நாட்களாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட மைத்தேயி இனமக்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தில் இணையசேவை வரும் சனிக்கிழமை வரை துண்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மே 3-ந் தேதி முதல் இணைய சேவைகள் துண்டிப்பு நீட்டிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் மணிப்பூர் வன்முறைகளை ஒடுக்குவதற்காக 500 பி.எஸ்.எப்.வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மணிப்பூரின் இம்பால் விமான நிலையத்துக்கு 30 கம்பெனி பிஎஸ்எப் வீரர்கள் வருகை தந்தனர். ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தில் 10,000க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் குவிக்கப்பட்டும் உள்ளனர்.
மணிப்பூருக்கு பிஎஸ்எப் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் குக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். குக்கி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பி.எஸ்.எப்.வீரர் ஒருவர் பலியானார். அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவை சேர்ந்த 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட போதும் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மைத்தேயி இன மக்களின் வீடுகள் தாக்கப்படுவதும் தீக்கிரையாக்கப்படுவதும் தொடருகிறது. இம்மாநிலத்தில் ஜூன் 10-ந் தேதி வரை இணையசேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.