மதுரையில் மாநாடு நடத்த நடிகர் விஜய் திட்டம்? – ரசிகர்களின் போஸ்டரால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி

மதுரை: மதுரையில் விரைவில் நடிகர் விஜய் மாநாடு நடத்துவதாக அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளதால், அரசியல் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியையும், அவரது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றுக்கும், சினிமாவுக்கும் தவிர்க்க முடியாத தொடர்புகள் உள்ளன. சினிமாவில் ஜொலித்த எம்ஜிஆர், கருணாநிதி ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் வந்து தமிழக அரசியலிலும் ஜொலித்தனர். முதல் மூவரும் முதலமைச்சர்களாகி மிக பெரிய மக்கள் செல்வாக்கை பெற்று தமிழகத்தை ஆட்சி செய்தனர். விஜயகாந்த், ஆளும் கட்சிகளே மிரளும் வகையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து எதிர்கட்சித் தலைவராகியுள்ளார். தற்போது இயக்குநர் சீமான், நடிகர் கமலும் அரசியலுக்கு வந்து மக்கள் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து, அதன்பின் பின்வாங்கினார். அதனால், ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் இனி நடக்க வாய்ப்பில்லாத நிலை உள்ளது. ரஜினிகாந்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்களை தாண்டி தமிழ் அரசியல் வட்டாரத்திலும் ஏற்படுத்தியுள்ளது. அவரும், அதை உறுதி செய்வது போலவே அவரது படங்களில் அரசியல் ‘பஞ்ச்’ வசனங்கள் பேசுவது, ஏழைகளுக்கு உதவுவதுபோல் நடித்து வருகிறார். சர்கார் படத்தில் நடிகர் விஜயின் அரசியல் வசனங்கள், சர்ச்சையை ஏற்படுத்தின.

தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு, ப்ளஸ்-டூ தேர்வுகளில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு உதவது, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது போன்ற அடுத்தக்கட்ட அரசியல் செயல்பாடுகளை தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மேற்கொண்டுள்ளார். இந்தத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பில் ‘அனைத்து தொகுதிகளிலும்’, ‘தொகுதி வாரியாக’ என்ற சொற்கள் கவனிக்க வைத்துள்ளன.

முன்பு தன்னுடைய படங்கள் வெளியாகும்போது மட்டுமே ரசிகர் மன்ற நிர்வாகிகளையும், ரசிகர்களையும் சந்தித்து வந்த நடிகர் விஜய், சமீப காலமாக அடிக்கடி சந்திக்கத் தொடங்கி உள்ளார். அவரது ரசிகர்கள் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு சில உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளுக்கும் வந்துள்ளனர். அவர்களை சென்னைக்கு அழைத்து நடிகர் விஜய் வாழ்த்தும் கூறியுள்ளார். அதனால், நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் நடிகர் விஜய் விரைவில் மாநாடு நடத்த உள்ளதாக அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடி வருகின்றனர். அந்த போஸ்டரில், ”மக்கள் ஆட்சி மலரட்டும், விரைவில் மதுரையில் மாநாடு. தளபதியார் அழைக்கிறார். மதுரை மாநகர் தளபதி விஜய் தலைமை மக்கள் இயக்கம” என்று குறிப்பிட்டுள்ளனர். அவரது ரசிகர்கள், மதுரை முழுவதும் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

போஸ்டரில் ரசிகர்கள் ஆர்வமிகுதியில் மாநாடு நடத்தப்போவதாக சும்மா போஸ்டர்கள் ஒட்டியுள்ளனரா அல்லது அவர்கள மன்ற மேலிட நிர்வாகிகள் ஒப்புதலோடு இந்த போஸ்டரை ஓட்டியுள்ளனரா என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் குழம்பி போய் உள்ளனர். தற்போது நடிகர் விஜய் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாளியுள்ளார். இந்தச் சூழலில் கட்சி தொடங்குவதற்கு முன்பே அவர் மதுரையில் மாநாடு நடத்துவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.