காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடைக்குள் புகுந்த பெண் காவலர்கள் ஓசியில் பிரட் ஆம்லேட் கேட்டு கடை ஊழியருடன் தகராறு செய்ததுடன், கடையில் கமர் கட்டு மிட்டாய்களை களவாண்ட புகாரில் சிக்கியதால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
ஜூஸ் கடைக்குள் புகுந்து தட்டில் உள்ள கமர் கட்டு மிட்டாய்களை கொத்தாக அள்ளும் இவர்தான் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி..!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் மப்டியில் நுழைந்த காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான பெண் போலீசார் பிரட் ஆம்லேட்டு, ஜூஸ் எல்லாம் ஆர்டர் செயது விட்டு பணம் கொடுக்காமல் கம்பி நீட்ட முயன்றுள்ளனர். கடைப்பையன் காசு கேட்டதால் டென்சனாகி ஓனர் எங்க.. போனப்போடு என்று எகிறி உள்ளார் இன்ஸ் பெக்டர் விஜயலட்சுமி..!
அந்த பையன் ஓனருக்கு போன் செய்து கொண்டிருக்கும் போதே தட்டில் வைக்கப்பட்டிருந்த கம்மர் கட்டு மிட்டாய்களை அப்படியே அள்ளி எடுத்து உடன் வந்திருந்த பெண் போலீசாரிடம் கொடுத்தார் விஜயலட்சுமி
செல்போனில் கடை ஓனரிடம் பேசிய , இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, என்னப்பா மேடத்துக்கு பிரட் ஆம்லெட் எல்லாம் தரமாட்டியா..? பிரட் ஆம்லெட் , ஜூஸ்க்கு கூட காசு கேக்குறான்..என்று உரிமையோடு கோபப்பட்டார்
அவரோ டீ தர சொல்வதாக கூறி உள்ளார். டீய வச்சிகிட்டு நாங்க என்ன செய்யபோறோம்ன்னு அங்கலாய்த்த விஜயலட்சுமி, உங்களுக்காகத் தான நாங்க டியூட்டி பார்க்குறோம், ஓனர்.. நீ ஸ்டேசனுக்கு வாப்பா ? என்று அதிகார தோரணையில் கூறினார்
அதோடு வாட்டர் பாட்டில் ஒன்றையும் ஓசியில் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து சென்று உள்ளார். இந்த அதிகார பிச்சை எல்லாம் அங்கிருந்த சிசிடிவியில் உரையாடல்களுடன் பதிவாகி இருந்தது
இதையடுத்து ஜூஸ் கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளுடன் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜை சந்தித்து, பெண் போலீசார் ஓசியில் மங்களம் பாடிய சம்பவத்தை விவரித்துள்ளார். இதையடுத்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, காவல்நிலைய ஜீப் ஓட்டுநர் பெண் காவலர் ஜெயமாலா, மற்றும் இரண்டு ஏஆர் பெண் காவலர்கள் உள்ளிட்ட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
ப்ரீயாக பிரட் ஆம்லெட்டுக்கும்… ஒரு ரூபாய் கம்மர் கட்டுக்கும்.. ஓசி குடிநீர் பாட்டிலுக்கும் ஆசைப்பட்டு , வில்லங்கம் செய்து சிக்கியதால் விஜயலட்சுமியுடன் சேர்ந்து 3 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.