வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் செயல்பட்டுவரும் ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 93 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதேபோன்று பால் உப பொருட்களான நெய், பால்கோவா, தயிர், மோர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு ஆவின் முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து திமிரி வழிதடத்தில் இயக்கப்படும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டைகளைக் கொண்டு செல்லும் வாகனத்தில் ஒரே பதிவில் கொண்ட இரண்டு வாகனங்கள் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வாகனம் மூலம் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 2500 லிட்டர் பால் பல நாட்களாக திருடப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவின் நிர்வாகத்தின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஒரே பதிவில் கொண்ட இரண்டு வாகனங்கள் இயக்கப்பட்டது குறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் ஆவின் நிறுவன அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சத்துவாச்சாரி போக்குவரத்து காவல் நிலையத்தில் பால் திருடப்பட்டது தொடர்பாகவும், ஒரே பதிவில் கொண்ட வாகனம் தொடர்பாகவும் ஆவின் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.