ஷார்ஜா,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்த தொடரில் முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களம் இறங்கிய பிர்ண்டன் கிங் மற்றும் சார்லஸ் அருமையாம தொடக்க அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதில் பிரண்டன் கிங் 64 ரன்னும், சார்லஸ் 63 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய புரூக்ஸ் 20 ரன், கார்டி 32 ரன், சேஸ் 7 ரன், ஹோப் 23 ரன், ஹாட்ஜ் 26 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்கள் குவித்தது. யுஏஇ அணி தரப்பில் ஜாகூர் கான் 3 விக்கெட்டும், அலி நசீர், சன்சித் சர்மா, அப்சல் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுஏஇ அணி ஆடியது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது வாசிம் 6 ரன், ஆர்யான்ஷ் சர்மா 20 ரன், அடுத்து களம் இறங்கிய அரவிந்த 36 ரன், லவ்பிரித் சிங் 6 ரன், ஆசிப் கான் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 95 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து களம் இறங்கிய பாசில் ஹமீது, அலி நசீர் இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதில் ஹமீது 49 ரன், அலி நசீர் 57 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் யுஏஇ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களே எடுத்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்தது இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 9ம் தேதி தொடங்குகிறது.