“ஆதிபுருஷ் படம் ராமாயணத்தில் வரும் அனுமனையும் மையப்படுத்தியது. கட்டாயம் அனுமனும் படத்தை பார்ப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால், படத்தை வெளியிடும் தியேட்டர்களில் அனுமனுக்காக கட்டாயம் ஒரு சீட் ஒதுக்கவேண்டும்” என்று ஆதிபுருஷ் படக்குழு அறிவித்திருக்கிறது.
“சாமி படத்துக்கு ஒரு சீட் ஒதுக்குறமாதிரியே லாரன்ஸ், சுந்தர்.சி மாதிரி இயக்குனர்கள் பேய் படத்துக்கு ஒரு சீட்டை ஒதுக்கினா தியேட்டருக்கு வர்றவங்களோட நிலமை என்னாகுறது?” என்று இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பும் இன்னொரு பக்கம் ஆதரவும் எழுந்துள்ள சூழலில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்தைத் தொடர்புகொண்டு, “ஆதிபுருஷ் படக்குழுவின் இந்த அறிவிப்புக்கு உங்கள் பதில்” என்னவென்று கேட்டோம்…
“தியேட்டர்களில் அனுமனுக்கு சீட் கொடுக்கவேண்டும் என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம். அதேநேரத்தில், தயாரிப்பாளர் ஆசைப்படுகிறார் என்பதால், நாங்கள் இதனைப் பெரிய விஷயமாக பார்க்கவில்லை. ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் சினிமாவில் ஒரு சென்டிமென்ட் உண்டு. அப்படியும் இதனை எடுத்துக்கொள்ளலாம். 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் 100 நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் தியேட்டர்கள் நிரம்பியதுண்டு. இப்போது, நிலைமை அப்படியில்லை. பெரிய நடிகர்களின் படங்களே அதிகபட்சம் மூன்று நாட்கள்தான் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடுகிறது. அதற்குப்பிறகு, இருக்கைகள் காலியாகத்தான் உள்ளன. அதனால்தான், சொல்கிறேன், ‘ஆதிபுருஷ்’ படம் தமிழ்நாட்டில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிரம்பப்போவதில்லை. ‘ஆதிபுருஷ்’ படக்குழு அனுமனுக்கு ஒரு சீட்தான் கேட்டிருக்கிறது. நாங்கள் பத்து சீட் கொடுக்க ரெடியாக இருக்கிறோம்.
இவர்கள், என்னதான் படத்திற்குள் மதத்தை நுழைத்தாலும் மக்கள் வந்து படம் பார்க்கமாட்டார்கள். ஏற்கெனவே, தேவரின் ‘தெய்வம்’ படத்திற்கு முருகர் சிலை எல்லா தியேட்டருக்கு முன்பும் வைத்திருந்தார்கள். ‘ஆடிவெள்ளி’ படம் வெளியானபோது வேப்பிலை தோரணம் எல்லாம் கட்டியிருந்தார்கள். இதெல்லாம் முன்பே நடந்ததுதான். அப்போது, சமூக வலைதளங்கள் எல்லாம் இல்லை. இப்போது, ட்ரெண்டாகவே வைத்துள்ளார்கள். இவர்கள் படத்திற்குள் மதத்தை நுழைப்பது பக்திகாக கிடையாது. தியேட்டருக்கு கூட்டம் வரவேண்டும் என்பதற்காகத்தான். படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அவ்வளவுதான்” என்கிறார்.