புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான, எம்.டி.என்.எல்., நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் ஊழியர்களையும் செயல்பாடுகளையும், மற்றொரு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மாற்ற அரசு முடிவு செய்திருப்பதாக, இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விரு நிறுவனங்களையும் இணைத்து ஒன்றாக்கும் முயற்சிகள் குறித்து வெகுகாலமாகவே பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது எம்.டி.என்.எல்., நிறுவனத்தை மூடிவிட்டு, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை மட்டும் நிர்வகிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எம்.டி.என்.எல்., நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறது. இதற்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. இதை மீட்டு, லாபப் பாதைக்கு திருப்புவது என்பது சாத்தியமே இல்லாதது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தை பி.எஸ்.என்.எல்., உடன் இணைத்தால், அந்நிறுவனமும் சரிந்துவிடும் அபாயம் உள்ளது. இரு நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பதால், இரு நிறுவனங்களுமே மீட்சியடையாமல் வீழ்ச்சியை சந்திக்கும்.
இந்த காரணத்தால், அரசு எம்.டி.என்.எல்., நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் ஊழியர்களையும் செயல்பாட்டையும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. மேலும், எம்.எடி.என்.எல்., நிறுவனத்தை பங்குச் சந்தை பட்டியலிலிருந்து வெளியே எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை பட்டியலிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பி.எஸ்.என்.எல்., ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பையில் செயல்பாடுகளை துவக்கி உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் நிதி நிலை, கடந்த இரண்டு ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டுக்குள், 5ஜி சேவையையும் வழங்க திட்டமிட்டு வருகிறது. எனவே இந்நிறுவனம் மட்டும் கவனம் செலுத்த அரசு விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement