சென்னை: உதயநிதி ஸ்டாலினின் மனிதன் படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அகமது இயக்கி உள்ள இறைவன் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த நிலையில், மீண்டும் அந்த தனி ஒருவன் காம்போ இந்த படத்தில் இணைந்துள்ளது.
சைலன்ட்டாக எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உருவாகி வந்த இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை நடிகர் ஜெயம் ரவி தற்போது அறிவித்துள்ளார்.
7 ஆண்டுகளுக்கு பிறகு: ஜெய், பிரியா ஆனந்த் நடித்த வாமணன் படத்தின் மூலம் 2009ல் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அகமது. அந்த படத்திற்கு பிறகு ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை மிகப்பெரிய ஹிட் அடித்தது.
அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடித்த மனிதன் படத்தை 2016ம் ஆண்டு இயக்கிய அகமது சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள இறைவன் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார்.
தனி ஒருவன் ஜோடி: ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தனி ஒருவன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து கலக்கி இருப்பார்.
இந்நிலையில், தனி ஒருவன் படத்துக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடித்துள்ள இறைவன் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இறைவன் ரிலீஸ் தேதி: சில ஆண்டுகளாகவே ஜெயம் ரவியும் நயன்தாராவும் அகமது இயக்கத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானாலும் அந்த படத்தை பற்றிய எந்தவொரு பெரிய ஹைப்போ விளம்பரமோ இல்லாமல் அமைதியாகவே இருந்தது.
இந்நிலையில், தற்போது திடீரென நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் இறைவன் படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் வெளியாகப் போவதாக படத்தின் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார்.