ஜூன் மாதம் தொடங்கியதும், உலகெங்கிலும் உள்ள நகரங்கள், சமூகங்கள் மற்றும் சமூக ஊடகதளங்களில் வண்ணமயமான வானவில் கொடிகள் பறக்கின்றன.
இது ‘ப்ரைடு மாதம்’, ‘அனைத்துக் காதலும் காதலே’, ‘ப்ரைடு என்பது நாம் யார் என்பதைக் கொண்டாடுவது, நாம் தனியாக இல்லை என்பதை உலகிற்கு நினைவூட்டுவது’ என்ற எண்ணங்களை வண்ணமயமான எழுத்துகளால் பதாகைகளில் சுமந்தபடி பேரணியாகச் செல்கிறது LGBTQ+ சமூகம்.
இப்படி தங்களின் சாதனைகளைக் கொண்டாடவும், தாங்கள் வாழ விரும்பும் சமூகத்தை வளர்ப்பதற்கான உறுதிமொழியைப் புதுப்பிக்கும் நேரமாகவும் ஜூன் மாதத்தை எடுத்துக்கொள்கிறார்கள் பால்புதுமையினர்.
1969-ல் ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் மன்ஹாட்டன் நகரில் நடைபெற்ற ஸ்டோன்வால் போராட்டம் மிக முக்கியமானது. அது தான் இன்று ஜூன் மாதம் PRIDE மாதமாகக் கொண்டாடப்பட காரணமாகிறது.
அன்றைய அமெரிக்காவில் ஓர்பால் ஈர்ப்பாளர்களை மாஃபியா கும்பல் போல கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதை எதிர்த்து ஓர்பால் ஈர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி வீதியில் இறங்கிப் போராடினார்கள்.
அவர்களின் தொடர் செயல்பாட்டினால் 1979ஆம் ஆண்டு “ஓர்பாலீர்ப்பாளர்களை சமூகம் ஒதுக்கக் கூடாது; மற்றவர்கள் போல இவர்களும் சமமானவர்களே” என்ற சட்டத்தை 39 மாகாணங்களில் செயல்படுத்தியது அமெரிக்க அரசாங்கம். ஸ்டோன்வாலுக்குப் பிறகு வடக்கு ஐரோப்பா முழுவதிலும் ஓர்பாலின எழுச்சி உருவாகியது. அது இன்று உலகெங்கும் பரவியுள்ளது.
இந்த எழுச்சியின் காரணமாக பல நாடுகளில் ஓர் பால் ஈர்ப்பு குற்றமற்றது என்றும், ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்குவது என்றும் பல முன்னேற்றங்கள் அடைந்துள்ளன. இருப்பினும், பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவது, திருநங்கைகளின் உரிமைகளுக்காக வாதிடுவது
அனைத்து LGBTQ+ தனிநபர்களுக்கும் விரிவான சுகாதாரம் மற்றும் சட்டப் பாதுகாப்புகளை உறுதிசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை இன்றும் தொடர்கிறது LGBTQ+ சமூகம். சமூகப் புறக்கணிப்பில் இருந்து பொதுச் சமூகத்திடம் நாங்களும் பொதுவில்தான் இருக்கிறோம் என்று உரக்கக் கூறுவதே PRIDE கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம்.
LGBTQ என்பது லெஸ்பியன், கே, பை செக்ஸுவல், ட்ரான்ஸ்-ஜெண்டர், குயர் என்று மாற்றுப் பாலின மற்றும் பால்புதுமையின மக்களை அடையாளப்படுத்தும் சொற்றொடரின் சுருக்கம் ஆகும்.
பாலினம் என்பது ஆண் பெண் என்ற இருமைத் தன்மை மட்டும் கிடையாது. காதல் என்பது எதிர் எதிர் பாலினத்திற்கானது மட்டுமே கிடையாது என்று கூறி, பாலினத்தேர்வு என்பது தனி மனித சுதந்திரம் என்பதை முன்வைக்கிறது LGBTQ சமூகம்.
1999-ல் பில் கிளிண்டன் தொடங்கி வைத்த இந்த ப்ரைடு மாதக் கொண்டாட்டம் இன்று சென்னை பெசன்ட் நகர் வீதிகள் வரை வண்ணமயமாக ஆட்டம் பாட்டத்தோடு வளம்வருகிறது. ஒரு காலத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் கைது என்ற செய்தியினைப் பார்த்திருப்போம். இப்போது ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதே தம்பதியில் ஒருவர் மகப்பேறு அடைந்து குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என அதே செய்திகளில் காண்கிறோம்.
சொல்லப்போனால் ஓரினச் சேர்க்கை எனும் வார்த்தையே மரியாதைக்குறைவான வார்த்தையாகப் பார்க்கப்பட்டு அதற்கு பதிலாக ஓர்பால் ஈர்ப்பாளர் ( Gay, Lesbian ) என்னும் வார்த்தை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதேபோல ஈர்பால் ஈர்ப்பாளர் (Bisexual ), திருநர், திருநம்பி, திருநங்கை, பால் புதுமையினர், மாற்றுப்பாலினம் எனக் கண்ணியமான வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட சமூகத்தில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
சமூக ரீதியாக இவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு மனநோய், இயற்கைக்கு எதிரானது, சட்ட விரோதம், மதத்திற்கு எதிரானது என்று பல கோணங்களில் வெறுப்பையும், கேலிகிண்டலை ஏற்படுத்தும் போக்கும் வரலாற்றில் நடந்திருக்கிறது.
உலக வரலாற்றில் பால்புதுமையினர் வரலாற்றை கிறிஸ்து பிறப்புக்கு முன், கிறிஸ்து பிறப்புக்குப் பின் என்ற இரண்டு விதமாகப் பிரிக்கலாம். மனிதன் தோன்றிய காலத்திலிருந்து ஓர்பாலின ஈர்ப்பு இருந்துவருகிறது. `மனிதனிடம் மட்டுமன்றி விலங்கிடமும் இதே நிலை இருக்கிறது’ என்கிறார் கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ. தனது சிம்போசியம் எனும் நூலில் இதனை எழுதியுள்ளார்.
பிளாட்டோவின் காலம் ஓர்பாலின ஈர்ப்பு வெட்கக்கேடானது என்ற கருத்துடையவர்கள் அதிக நபர்கள் வாழ்ந்த காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் `ஒரே பாலினக் காதலர்கள் சாதாரண மனிதர்களைவிட மிகவும் பாக்கியசாலிகள்’ என்ற பிளாட்டோ பின்னர் அதில் மாற்றுக்கருத்தும் கொண்டிருந்தார்.
கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே ரோமாபுரியை ஆண்ட நீரோ கலிகுலா போன்றவர்கள் ஓர்பாலின ஈர்ப்புக்கு சமூக ரீதியாக மட்டுமல்ல சட்டரீதியாகவும் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். நீரோ ஒரு படி மேலே சென்று தன் காதலன் ஸ்போரஸைத் திருமணம் முடித்தார்.
இப்படி இருந்த சூழ்நிலை நான்காம் நூற்றாண்டிற்குப் பிறகு இயற்கைக்கு எதிரானது என கிறிஸ்தவ மதம் வழியாக மிகவும் எதிர்மறையாகப் பிரசாரம் செய்யப்பட்டது. அகஸ்டின், தாமஸ் என்ற இரு மதபோதகர்கள்,
என, ஒரு பாலின ஈர்ப்பு மதத்திற்கு எதிரானது என்று பரப்பினர். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தவர்கள் இவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் ஓர்பாலின ஈர்ப்பு பெரும் தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்பட்டது.
இதற்கு வலுச்சேர்க்கும் விதமாக 1886-ம் ஆண்டு, மனநல மருத்துவர் ரிச்சர்ட் வான் க்ராஃப்ட்-எபிங் தனது ’சைக்கோபதியா செக்ஸுவாலிஸ்’ என்ற புத்தகத்தில், இது ஒரு ஜீன் குறைபாடு. இதன் மூலம் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்று எழுதியிருந்தார்.
இந்தக் கருத்தை வைத்து மருத்துவ உலகம் ஓர்பாலின ஈர்ப்பை ஒரு மனநோயாகப் பார்க்கத் தொடங்கியது. ஆனால் அந்தக் கருத்து மருத்துவத்துறையால் பின்நாளில் நிராகரிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இது ஜீன் கோளாறு, கர்ப்பத்தின் போது தாயின் ஹார்மோன் கோளாறினால் ஏற்படுகிறது என்று சொல்லப்பட்டது. இதை மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. சைக்கோ அனலிடிகள் தியரியின் படி குழந்தை வளரும் சூழ்நிலையில் ஏற்படும் மனபாதிப்பின் காரணமாக இவ்வாறு ஆக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் ஓர்பாலின ஈர்ப்பாளர்களின் வீட்டுச் சூழல் சிறப்பாக இருந்தாலும் இது தொடர்வதால் அந்தத் தியரி நிராகரிக்கப்பட்டது.
அடுத்து ஒருவரைப் பார்த்து இன்னொருவருக்கு ஹோமோசெக்ஸ் (ஓர்பாலீர்ப்பு) விருப்பம் ஏற்படும் எனும் இன்புலியன்ஸ் தியரியும் (Influence Theory) முன்வைக்கப்பட்டன. இதுவும் மருத்துவ உலகில் நிராகரிக்கப்பட்டது.
ஓர்பாலின ஈர்ப்பு சரியா, தவறா என்னும் கருத்தும் அதற்கான சட்டங்களும் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகின்றன. 1804-ம் ஆண்டு உலகை ஆண்ட பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் ஒரே பாலினத்தில் புணர்ச்சியில் ஈடுபடுவது தவறில்லை என சட்டம் கொண்டு வந்தார்.
இங்கிலாந்தில் இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஆண்களுக்கிடையே நடைபெற்ற ஓர்பாலின நடவடிக்கைக்காகக் கைதுகளும் வழக்குகளும் அதிகரித்தன. இதை ஆய்வு செய்த Wolfenden குழு 1957-ல் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் 1885-ம் ஆண்டு போடப்பட்ட ஓர்பாலீர்ப்பு மற்றும் பாலியல் தொழிலுக்கான தடைச் சட்டத்தை நீக்கியது.
அடுத்து இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே ஓர்பாலீர்ப்பு தவறாகப் பார்க்கப்பட்டது. புராணக் காலங்களில்கூட ஓர்பாலீர்ப்பு தவறாகப் பார்க்கப்படவில்லை. ஆண் பெண் உறவுகளில் அதுவும் ஒருநிலையாக இருந்துள்ளது.
காம சாஸ்திரத்தின் படி ஆணும் ஆணும் ; பெண்ணும் பெண்ணும்கூட இணை சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பதினேழாம்-பதினெட்டாம் நூற்றாண்டில்கூட இது ஒரு பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படவில்லை. கஜுராஹோவில் உள்ள கோவில்களில், பெண்கள் மற்ற பெண்களை மோகத்துடன் அணைப்பது மற்றும் ஆண்கள் தங்கள் பிறப்புறுப்புகளை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்வது போன்ற சிலைகள் உள்ளன.
ஆனால் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே இந்தச் சூழல் மாற்றப்பட்டுள்ளது. 1837 மெக்காலே என்ற காலனியாதிக்க ஆங்கிலேயரால்தான் முதல் முதலாக இந்திய சட்ட விதிகள், அதாவது ஐ.பி.சி தயாரிக்கப்பட்டது. இதன்படி IPC 377 section-படி ஹோமோ-செக்ஸ் இயற்கை மற்றும் இயல்பான செயல்பாடுகளுக்கு எதிரானது என்று சொல்லப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் ஆண்ட காமன்வெல்த் நாடுகளும் இதே நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கின.
இப்படி பல நாடுகளில் தண்டனைக் குற்றமாக இருந்த ஓர்பாலீர்ப்பு அண்மைக்காலங்களில் மாற்றம் பெற்றுவருகிறது. நெதர்லாந்தில் 1989 சிவில் பார்ட்னர்ஷிப் சட்டப்படி, ‘ஒரு ஆணும் ஆணும், ஒரு பெண்ணும் பெண்ணும் இணைந்து திருமணம் செய்துகொள்ளாமல் வாழலாம்’ எனும் சட்டம் இருந்தது. அதன்பிறகு 2001ஆம் ஆண்டு திருமணமும் செய்து வாழலாம் என்று சட்டம் மாற்றப்பட்டது.
உலகின் முதல் முதலாக ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு இங்குதான் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி, கனடா, பெல்ஜியம் மற்றும் அமெரிக்கா என ஓர்பாலினத் திருமணம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தியாவில்கூட 150 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஐ.பி.சி சட்டம் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி நீக்கப்பட்டது. இதன் மூலம் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளலாம் எனும் சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ்வாறு சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டாலும் யூகத்தின் அடிப்படையிலும் கற்பனையின் அடிப்படையிலும் உருவான கருத்துகளை வைத்துக்கொண்டு இம்மக்களைக் குற்றவாளியாக, தவறானவர்களாக சமூகத்தில் இன்றும் கருதுகிறார்கள்.
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து எந்தெந்தக் கட்டங்களில் ஓர்பாலீர்ப்பு பெற்று வளர்கிறான் என்பதை மருத்துவ உலகம் ஆய்வுப்பூர்வமாக வரையறுத்திருக்கிறது. அது மட்டுமன்றி, அவர்களுக்கு எத்தகைய உட்பிரிவுகள் உள்ளன என்பதையும் கணித்திருக்கிறது. இவற்றையெல்லாம் புரிந்துகொண்டால் அவர்களைப் பற்றிய தவறான புரிதல்களில் இருந்து வெளிவரலாம்.
மனதளவில் உடலளவில் ஏதோ ஒரு வித்தியாசம் தனக்குள் இருப்பதாக இவர்கள் உணர்வார்கள். ஆனால், அது என்ன என்பதை இவர்களால் துல்லியமாக உணர முடியாது இது வித்தியாசத்தை உணரும் கட்டம், ஆங்கிலத்தில் Sensitization என்று சொல்வார்கள். அடுத்தகட்டமாக தனக்கு ஓர்பாலீர்ப்பு ஆர்வம் இருப்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், மனதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். இது அடையாளக் குழப்பம், அதாவது ஆங்கிலத்தில் Identity confusion என்று அழைக்கப்படுகிறது.
அடுத்து தான் யார் என்பதைத் தெளிவாக முடிவு செய்து விடுவார்கள். ஆனால் வெளியில் சொல்ல தயக்கம் இருக்கும். இது அடையாளத்தைப் புரிந்துகொள்ளுதல் ஆங்கிலத்தில் identity assumption என்று சொல்லப்படுகிறது.
கடைசியாக தான் யார் என்பதை பகிரங்கமாக வெளியில் சொல்ல எந்தவிதத் தயக்கமும் சஞ்சலமுமின்றி இருப்பது இது அடையாளத்தை ஏற்றுக்கொள்ளுதல். ஆங்கிலத்தில் Stage of commitment என்கிறார்கள்.
இதுமட்டுமன்றி அதனுள் இருக்கும் உட்பிரிவுகளைப் பார்த்தோமானால் வெளிப்படையாகத் தன்னை Homo-sex என்று வெளிப்படுத்திக்கொள்பவர்கள் blatant homosexual என்று அறியப்படுகிறார்கள். அதுவே மறைத்துக்கொள்கிறார்கள் என்றால் “Desperate homosexual.” அதேவேளையில் சூழ்நிலை காரணமாக பாலுறவில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக சிறைக்கைதிகள், விடுதியில் தங்கி இருப்பவர்கள், கப்பலில் பணிபுரிவோர், ராணுவ முகாமில் இருப்பவர்கள்: இவர்கள் situational homosexual என்று அறியப்படுகிறார்கள்.
அடுத்து பணத்துக்காகவோ ஒரு தொழிலாகச் செய்பவர்கள் “homosexual prostitution” என்று அழைக்கிறார்கள். அடுத்து எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஊரறிய திருமணம் செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்பவர்கள் “adjusted homosexual” என்று கூறப்படுகிறார்கள்.
இவ்வாறு பல கோணங்களில் இருக்கும் ஓர் பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றி நாம் அறிந்துகொண்டால் சமூகத்தில் தவறாகப் பரவும் பல்வேறு கற்பனைகளில் துளியும் உண்மை இல்லை என்பதை நம்மால் உணர முடியும். பாலின ஈர்ப்பை மருத்துவ சிகிச்சை மூலம் மாற்ற முடியும் என்ற கருத்து முற்றலும் தவறானது.
உலக அளவில் மருத்துவத் துறைகளில் இதற்கான சிகிச்சைகள் சோதிக்கப்பட்டது. ஆனால், எதுவுமே வெற்றி பெறவில்லை. அறிவியல்பூர்வமாக மருத்துவத் துறையில் நோயாகக் கருதாத ஒன்றிற்கு எதற்காக சிகிச்சை பெற வேண்டும்? ஆகவே இது நோயல்ல. ஆணும் பெண்ணும் இணை சேர்வதுபோல, ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் தனக்கான பாலினத் துணையைத் தேடிக்கொள்ளும் இணை தேடலே என்கிறது அறிவியல்.
ஓர்பாலீர்ப்பு நபர்களுக்கு உளவியல் ரீதியாகவும் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. அது எல்லோரும் தனக்கு எதிராக இருப்பதாக நினைக்கும் மனோபாவம்தான். அந்த நிலை வரக் காரணம், ‘குடும்பம், சமுதாயம் தன்னை ஒதுக்கி வைக்கிறது’ என்று உள்ளுக்குள்ளேயே குமைந்துகொள்வதாலும், கல்வி கற்றல், பணிபுரிதல் போன்றவற்றிலிருந்தும் குடும்பப் பொறுப்பில் இருந்தும் விலகி நிற்பதே காரணமாகும்.
இது மாற வேண்டும் என்றால் அவர்கள் தங்கள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் தங்கள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றால் சமுதாயத்தில் அவர்களைப்பற்றி இருக்கும் தவறான புரிதல்கள் மாற வேண்டும்.
ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்குப் பெண்ணோ காதல் செய்வது இயற்கையே! ஆக அனைத்துக் காதலும் காதலே என்ற எண்ணம் வர வேண்டும். அவர்கள் யாரை நேசித்தாலும், அவர்கள் இந்த உலகில் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்களே.
ஆக, அனைத்துக் காதலும் காதலே என்று உணர்வோம்! வன்மம் ஒழிய அன்பின் வண்ணங்களைத் தூரிகையில் தீட்டிடுவோம்!