சென்னை: தமிழ்நாட்டு மக்களின் தல தோனியாக மஞ்சள் ஜெர்ஸியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இத்தனை ஆண்டுகளாக கேப்டனாக இருந்து 5 முறை வெற்றிக் கோப்பையையும் வாங்கித் தந்துள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தயாரிக்கும் முதல் படமே தமிழ் படம் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி உள்ள Let’s Get Married படத்தின் தாறுமாறான டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
ஹரிஷ் கல்யான், இவானா, நதியா, வெங்கட் பிரபு, யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தோனி தயாரிப்பு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அடுத்த ஆண்டும் விளையாட தான் விரும்புவதாகக் கூறி இந்த ஆண்டும் ஓய்வை அறிவிக்காத தோனி சினிமா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
நடிகர் விஜய்யுடனான சந்திப்பை பார்த்த ரசிகர்கள் தோனி தயாரிப்பில் விஜய் நடிப்பாரா என எதிர்பார்த்தனர். ஆனால், கடைசியில் ஹரிஷ் கல்யாண், இவானா நடிப்பில் உருவாகும் படத்தை தோனி முதன் முதலாக தயாரித்துள்ளார்.
லெட்ஸ் கெட் மேரீட் டீசர்: எல்ஜிஎம் என சுருக்கமாகவும் லெட்ஸ் கெட் மேரீட் என விரிவாகவும் ஆங்கில தலைப்பில் உள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர்.
மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் விடிவி கணேஷும் இந்த படத்தில் காமெடி கலாட்ட செய்ய காத்திருக்கின்றனர் என்பது தற்போது வெளியான டீசரிலேயே தெளிவாக தெரிகிறது. ஹரிஷ் கல்யாணின் நண்பனாக நடித்துள்ள ஆர்ஜே விஜய்யும் அட்டகாசம்.
எப்படி இருக்கு?: தோனி மனைவி சாக்ஷி சிங் தோனி தயாரிப்பில் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் லோ பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் சின்ன சின்ன கட்களாக காமெடி தூக்கலாக உருவாகி உள்ளது.
லவ் டுடே படத்தை போல இதுவும் ஹிட் அடிக்குமா? அல்லது சுமாராக இருக்குமா என்பது திரைக்கதை பார்த்தால் தெளிவாகத் தெரியும். டீசரை பொறுத்தவரையில் இளைஞர்களை டார்கெட் செய்து படம் உருவாகி உள்ளது. ஆனால், ரொம்ப கேட்சியாக எந்தவொரு காட்சியும் இல்லை என்பது போலத் தோன்றுகிறது. இவானா அப்படியே லவ் டுடே படத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்ததை போலத்தான் இருக்கிறார். நதியாவை பார்த்தால் ஹெவியாக எம். குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி வாடை வருகிறது. Let’s wait and watch!