மும்பை : சமூக வலைதளங்களில் மத்திய அரசு தொடர்பாக வெளியிடப்படும் செய்திகளின் உண்மை தன்மையை அறிவதற்கான அமைப்பு உருவாக்கப்படுவதை எதிர்த்து, ‘எடிட்டர்ஸ் கில்ட்’ எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, தகவல் தொழில்நுட்ப விதிகளில் சமீபத்தில் திருத்தம் செய்தது.
இதன்படி, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் போலியான செய்திகளைக் கண்டறிய ஓர் உண்மை தன்மை அறியும் அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது.
மத்திய அரசு தொடர்பாக பதிய, பகிரப்படும் செய்திகளில் போலியான, உண்மைக்கு புறம்பான, தவறான தகவல்களை பரப்பும் செய்திகளின் உண்மை தன்மையைக் கண்டறியும் அதிகாரத்தை பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் மையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட விதிகளை எதிர்த்து, காமெடி நிகழ்ச்சிகளை நடத்தும் குனால் காம்ரா, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், எடிட்டர்ஸ் கில்ட் மற்றும் இந்திய பத்திரிகைகள் சங்கம் சார்பிலும் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த புதிய அமைப்பை செயல்படுத்தும் நடவடிக்கையை, ஜூலை 5ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது.
நேற்று நடந்த விசாரணையின்போது, ‘ஜூலை 7ம் தேதி இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடத்தப்படும்’ என, நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, புதிய அமைப்பை செயல்படுத்தும் நடவடிக்கையை, ஜூலை 10ம் தேதி வரை ஒத்தி வைப்பதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்