பாலசோர்: ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டபோது பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள் சிலரின் செல்போன்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.
ஒடிசா மாவட்டம் பாலசோர் அருகே கடந்த 2-ம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் இன்னும் 83 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இதையடுத்து, அவர்களது உறவினர்களின் டிஎன்ஏ மாதிரியைப் பெறும் முயற்சியில் ஒடிசா அரசு ஈடுபட்டு வருகிறது. இதுவரை 33 பேரின் டிஎன்ஏ மாதிரிகளை புவனேஷ்வர் எய்ம்ஸ் பெற்று, அவற்றை டெல்லி எய்ம்ஸ்-க்கு அனுப்பிவைத்துள்ளது.
மொபைல்போன்கள் பறிமுதல்: இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஒடிசா அரசின் ஒப்புதலுடன் ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட சிபிஐ, விபத்து குறித்து 4 பிரிவுகளின் கீழ் நேற்று (ஜூன் 6) வழக்குப் பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக, விபத்தின்போது பணியில் இருந்த ரயில்வே அதிகாரிகள் சிலரின் மொபைல்போன்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது. மொபைல் போன்களில் பதிவாகி உள்ள தொலைபேசி உரையாடல்கள், வாட்ஸ்அப் கால்கள், சமூக ஊடக பயன்பாடு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகோ பைலட்டிடம் விசாரணை நடத்தவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிவாரணத் தொகை: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் மத்திய மாநில அரசுகளும், ரயில்வே துறையும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்திருந்தன. அதன்படி, 688 பேருக்கு ரூ. 19.26 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.