வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: அமெரிக்காவில் உள்ள தங்கள் நாட்டுக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஓட்டலை, நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் அரசு 3 ஆண்டுகளுக்கு 220 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பு படி ரூ.1815 கோடி) குத்தகைக்கு விட்டுள்ளது. பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் உச்சத்தால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. மக்கள் அன்றாட வாழ்வில் இரு வேளை உணவு கிடைக்கவே போராடி வருகின்றனர். கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
பாகிஸ்தான் அரசு பொருளாதார நெருக்கடியை, சரி செய்ய பல்வேறு வேலைகளை களத்தில் இறங்கி செயல்படுத்தியது. ஆனாலும், அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்வில் சிக்கி தவித்தனர்.
அதேபோல், நிவாரணப் பொருட்களை வாங்க மக்கள் வரிசையில், காத்து கிடத்தனர். நிவாரண பொருட்கள் வழங்கும் போது, கூட்ட நெரிசலில், சிலர் தனது உயிரை மாய்த்து கொண்டனர். அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செலவினங்களை 15 சதவீதம் குறைக்க உத்தரவிடப்பட்டது.
அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள் வெளிநாட்டு பயணங்களை கைவிடுமாறு அந்நாட்டு, பிரதமர் ஷெரீப் கேட்டுக்கொண்டார். இதற்கு அமைச்சர்கள் தானாக முன்வந்து நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், நாட்டின் பொருளாதா நெருக்கடியை சமாளிக்க, அந்நாட்டின் பழமையான ஓட்டலை குத்தகைக்கு விட முடிவு எடுத்துள்ளது.
அதன்படி, 100 ஆண்டுகள் பழமையான, ஆயிரத்து 250 அறைகள் கொண்ட ரூஸ்வெல்ட் ஓட்டலை, 220 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பு படி ரூ.1815 கோடி) குத்தகை விடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கவாஜா சாத் ரபீக் தெரிவித்துள்ளார். இந்த ஓட்டல் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ளது.
. 3ஆண்டுகள் குத்தகை முடிந்ததும், பாகிஸ்தான் அரசிடம் ஓட்டல் திரும்ப ஒப்படைக்கப்படும்.
இந்த முடிவு, பாகிஸ்தானில் நிலவி வரும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பெரிதும், உதவிக்கரமாக இருக்கும் என அந்நாட்டு அரசு நம்புவதாக கருதப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement