கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த நிலையில் மோடி குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். இதையடுத்து ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து ராகுல் காந்தி, டெல்லியிலுள்ள அரசு இல்லத்தை காலி செய்யும் நிலை ஏற்பட்டது. அதே சமயம் ராகுல் காந்தி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்கிறார். எம்.பி பதவி பறிபோனபிறகு ராகுல் காந்திக்கு எம்.பி என்ற நிலையில் வழங்கப்பட்டிருந்த தனி உதவியாளர், ஓட்டுநர் ஆகியோரை மாநில அரசு திரும்பப் பெற்றது.
இத்தகைய நடவடிக்கையின் காரணமாக வயநாடு மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருக்கின்றன. இடைத்தேர்தலை முன்னிட்டு கோழிக்கோடு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டன. காலை 10 மணி முதல் `மாக் போலிங்’ நடத்தப்பட்டது. இதற்காக ஏற்கெனவே அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் கலெக்டர் அலுவலகத்திலிருந்து அழைப்பு விடப்பட்டிருந்தது. அரசியல் கட்சியினர் மாக் போலிங்கில் கலந்துகொண்டனர். தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்படி இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தேர்தல் பொறுப்பாளரான சப் கலெக்டர் முன்னிலையில் மாக் போலிங் நடைபெற்றது. அதே சமயம் தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இது குறித்து மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பினீஸ் குமார் பேசுகையில், “மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் கமிஷனிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், நான் இந்த மாக் போலிங்கில் கலந்துகொண்டேன். காலையில் இதில் கலெக்டர் கலந்துகொண்டதாகக் கூறினார்கள். ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது தொடர்பான மேல்முறையீடு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே திடீரென தேர்தல் கமிஷனின் இதுபோன்ற செயல்பாட்டில் மர்மம் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்றார்.
ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேலைகள் தொடங்கியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.