வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் கணவர் இறந்ததாக பெண் ஒருவர் அளித்த சான்றிதழ் போலி என தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி இரவு, 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் விபத்தில் சிக்கியது. இதில் 288 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக , தலா ரூ.1 0 லட்சம் வழங்கப்படும் என ரயில்வேயும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடியும், ரூ.5 லட்சம் வழங்கப்படும் என ஒடிசா அரசும் அறிவித்தது.
இவ்வளவு நிவாரணம் அறிவிக்கப்பட்டதும், ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தின் மனியாபந்தா பகுதியை சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்ற பெண்ணுக்கு அதனை பெற ஆசை வந்தது. இதனால், கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழும் கணவன் பிஜய் தத்தா இறந்துவிட்டதாக கூறி, சில சான்றிதழ்களை அளித்து, நிவாரண தொகையை வழங்கும்படி அதிகாரிகளிடம் மனு செய்தார். அவர் அளித்த சான்றிதழ்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அது போலி என்பதை கண்டுபிடித்து போலீசில் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து கீதாஞ்சலியை வரவழைத்த போலீசார், கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் பிஜய் தத்தாவிற்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், அரசு பணத்தை மோசடியாக பெற முயன்றதற்கும், போலி சான்றிதழ்களை பெற முயன்றதற்கும் மனைவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் வலியுறுத்தினார்.
இந்த புகாரை விபத்து நடந்த பஹாநகர் போலீஸ் ஸ்டேசனில் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனால், கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் கீதாஞ்சலி தலைமறைவானார்.
இதனிடையே, இறந்தவர்களின் உடல்களை போலியாக உரிமை கோருபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே மற்றும் ஒடிசா போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement