ஒடிசா: அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிசா கடற்கரையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் தீவிலிருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையின் போது ஏவுகணையின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாக செயல்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏற்கனவே மூன்று முறை சோதனை அடிப்படையில், செலுத்தப்பட்ட இத்தகையை ஏவுகணைகளின் துல்லியம் மற்றும் செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவை உறுதிசெய்யப்படுவதற்கு ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்குமுன், முதன் முறையாக இந்த இரவுநேரப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் செலுத்துபாதை முழுவதும் பல்வேறு இடங்களில் ராடார், டெலிமெட்ரிக், மின்னணு கண்ணாடி இழை கண்காணிப்பு செயல்முறை போன்றவை அமைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரிகள், பாதுகாப்பு படைகளின் தளபதிகள் இந்த வெற்றிகரமான அணுஆயுதம் தாங்கிய ஏவுகணை சோதனையைப் பார்வையிட்டனர்.
‘அக்னி பிரைம்’ ஏவுகணையின் வெற்றிகரமான பரிசோதனைக்காகவும், மிக சிறப்பான செயல்பாட்டுக்காகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராணுவத்தினரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.