ஆட்டிசம், டிஸ்லெக்சியா போன்ற சவால்களைக் கொண்ட சிறப்புக் குழந்தைகள் (Special Child) பற்றிய இந்தியத் திரைப்படங்கள் 2000-ம் ஆண்டிற்குப் பிறகுதான் உருவாகத் தொடங்கின. இதைப் பற்றிய விழிப்புணர்வும் சமூகத்தில் அப்போதுதான் பெருக ஆரம்பித்தது. ஆனால் தொண்ணூறுகளிலேயே இவ்வாறானதொரு சிறப்புக் குழந்தையைப் பற்றிய திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். 1990-ல் வெளிவந்த ‘அஞ்சலி’ என்கிற அந்தத் திரைப்படம், மூன்று தேசிய விருதுகளைப் பெற்றதோடு இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதிற்கு அனுப்புவதற்காகத் தேர்வும் செய்யப்பட்டது. ‘சிறந்த குழந்தை நட்சத்திர’ விருதை ஷாம்லி வென்றார்.
சிறப்புக் குழந்தைகளை அவர்களின் குடும்பமும் சரி, குறிப்பாக இந்தச் சமூகமும் சரி, எவ்வித மனத்தடையும் சங்கடமும் இல்லாமல் இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற செய்தியை இந்தத் திரைப்படம் அழுத்தமாகச் சொல்லியிருந்தது. ஒரு வெகுசன திரைப்படத்தின் அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களைக் கொண்டிருந்தாலும், சொல்ல வந்த செய்தி ஆத்மார்த்தமாகச் சொல்லப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில் ‘அஞ்சலி’ பாப்பாவாக நடித்திருந்த ஷாம்லியை, அவரது அக்காவாக நடித்திருந்த அனு பயங்கரமாக வெறுப்பார். மூளை வளர்ச்சிக் குறைபாடுள்ள அஞ்சலியை அக்கம் பக்கத்துப் பிள்ளைகள் செய்யும் கிண்டல்களும் கேலிகளும் அனுவை அவமானம் அடையச் செய்யும். “இது நம்ம வீட்டுக்கு வேண்டாம்… எங்காவது வீசி எறிஞ்சிடுங்க” என்று கோபத்தைக் காட்டுவாள். “ஏம்ப்பா… அஞ்சலி பாப்பா நம்ம வீட்ல வந்து பொறந்தா… எதிர்த்த வீட்டுல பொறந்திருக்கலாம். மேல் வீட்டுல பொறந்திருக்கலாம்.” என்று குழந்தைக்கே உரிய ஆதங்கத்துடன் அவள் கேட்கும் போது தந்தையான ரகுவரன் சொல்லும் கவிதைத்தனமான பதில்தான் இந்தப் படத்தின் மையம். “அவ கடவுளோட செல்லக் குழந்தைம்மா… நம்மளாலதான் அஞ்சலியை நல்லாப் பார்த்துக்க முடியும்னு முடிவு செஞ்ச கடவுள், நம்ம கிட்ட பாப்பாவை ஒப்படைச்சிருக்கு. கடைசி வரை நாமதான் அவளை நல்லாப் பார்த்துக்கணும்” என்று தந்தை சொல்லும் உபதேசம்தான் அனுவின் மனதைத் தலைகீழாக மாற்றும். அஞ்சலியை மனதார வெறுத்த அவள்தான் இறுதிக்காட்சியில் ‘எந்திரி அஞ்சலி… ஏந்திரி…’ என்று அடிவயிற்றிலிருந்து ஓலமிடுவாள். அனுவிடம் ஏற்பட்ட இந்த மனமாற்றத்தைப் பார்வையாளர்களுக்கும் கடத்தியதுதான் ‘அஞ்சலி’ படத்தின் சிறப்பு.
அஞ்சலி படத்தின் அவுட்லைன்
சேகர், சித்ரா தம்பதியினருக்கு அர்ஜுன் என்கிற மகனும் அனு என்கிற மகளும் இருக்கிறார்கள். அன்பான குடும்பம். சித்ராவிற்கு மூன்றாவது குழந்தை பிறக்கவிருக்கும் காட்சியோடு படம் தொடங்குகிறது. தனது குழந்தையைப் பார்ப்பதற்கு ஆவலாகக் காத்திருக்கும் சித்ராவிடம் ‘குழந்தை இறந்துதான் பிறந்தது’ என்று சேகர் கூறுகிறார். சில வருடங்கள் கழித்து அவர்கள் ஓர் அபார்ட்மென்ட்டிற்கு இடம் பெயர்கிறார்கள்.
‘ஆபிஸ் டூர்’ என்று அவ்வப்போது சில நாள்கள் காணாமல் போய் விடும் சேகரின் மீது சித்ராவிற்கு மெல்லிய சந்தேகம் தோன்றுகிறது. அதற்கேற்ப சில சம்பவங்கள் நடக்கின்றன. சேகருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்புள்ளதோ என்று சித்ரா சந்தேகப்படுகிறாள். இதனால் குடும்பத்தில் மோதலும் பிரிவும் ஏற்படுகின்றன. இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடையும் போது “அஞ்சலி பாப்பா இறக்கவில்லை. மூளை வளர்ச்சிக் குறைபாட்டோடு பிறந்ததால் அதற்குரிய காப்பகத்தில் வைத்து வளர்க்கிறேன். இந்த உண்மை தெரிந்தால் உன்னால் தாங்க முடியாது என்பதால் மறைத்து விட்டேன்” என்று சேகர் கூறுகிறார். உடனடியாகப் பெருகும் தாய்ப்பாசத்துடன் அஞ்சலியை உடனே தன் வீட்டுக்கு அழைத்து வருகிறாள் சித்ரா.
அர்ஜுனும் அனுவும் அஞ்சலியைப் பயங்கரமாக வெறுக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் வரும் கேலி காரணமாக அஞ்சலியை அவமானச் சின்னமாகக் கருதுகிறார்கள். ஆனால் மெல்ல மெல்ல அவர்களுக்குள் மனமாற்றம் ஏற்படும்படியான நிகழ்வுகள் உண்டாகின்றன. சேகரிடம் சகஜமாகப் பழகும் அஞ்சலி, சித்ராவைப் பார்க்கும் போதெல்லாம் பயந்து நடுங்கி விலகுகிறாள். இது சித்ராவிற்குள் பெரிய துயரத்தை ஏற்படுத்துகிறது. ‘அம்மா’ என்று ஒருமுறையாவது அவள் கூப்பிட மாட்டாளா என்று சித்ரா ஏங்குகிறாள். அதற்குரிய காலமும் கனிகிறது. ஆனால்…
தாய்க்கு நிகராக தந்தையின் அன்பைப் பதிவு செய்த ரகுவரன்
ரகுவரனின் நடிப்புப் பயணத்தில் ‘அஞ்சலி’ ஒரு மிகச்சிறந்த படம் எனலாம். அவர் ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர பாத்திரங்களில் நிறைய நடித்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் ஒரு கண்ணியமான, பாசத்துக்குரிய தகப்பனைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி பார்வையாளர்களின் மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறார். பொதுவாகத் தமிழ் சினிமாக்களில் அம்மா பாசம்தான் பெரிதும் பேசப்படும். அப்பாக்கள் கோபக்காரர்களாக சைடில் ஓரமாக வந்து போவார்கள். அதிலும் ‘சிறப்புக் குழந்தை’ பற்றிய படம் என்னும் போது அம்மா சென்டிமென்ட்டைத் தூக்கலாக வைப்பது ஒரு மரபு. ஆனால் மணிரத்னத்தின் ட்ரீட்மென்ட் வித்தியாசமாக அமைந்திருந்தது.
தாய்க்கு நிகரான அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றை ஒரு தந்தையின் பாத்திரம் வெளிப்படுத்துவதை ரகுவரனின் மூலம் சாத்தியமாக்கி இருக்கிறார் மணிரத்னம். மனைவியின் நலனிற்காக ‘சிறப்புக் குழந்தையை’ ரகசியமாக வளர்க்கும் பொறுப்பை ஒற்றை நபராக ரகுவரன் சுமப்பார். அந்த மன உளைச்சலைத் தான் மட்டுமே ஏற்றுக் கொள்வார். ‘இந்தாளுக்கு வேறு பெண்ணின் தொடர்பு இருக்குமோ’ என்று சித்ராவைப் போலவே பார்வையாளர்களுக்கும் சந்தேகம் வரும்படியாகக் காட்சிகள் நகரும். ஆனால் ரகுவரனின் தியாகம் பற்றி அறிந்தவுடன் அந்த கேரக்ட்டர் மீது சித்ராவைப் போலவே நமக்கும் மிகப்பெரிய மரியாதை வந்துவிடும்.
ரகுவரனின் சிறப்பான நடிப்பெல்லாம் சரி. ஆனால் அதெல்லாம் அஞ்சலி வீட்டுக்குள் வரும் வரைக்கும்தான். அதன் பிறகு ரேவதியின் ராஜாங்கம்தான். ரகுவரனை மிக அநாயசமாக ஓவர்டேக் செய்து விடுவார். மற்ற அனைவரிடமும் இயல்பாகச் செல்லும் அஞ்சலி, தன்னிடம் மட்டும் வரவில்லையே என்பதையும் தன்னை ‘அம்மா’ என்று அழைக்கவில்லையே என்பதையும் விதம் விதமான துயரமான முகபாவங்களில் பதிவு செய்து தாயன்பின் மேன்மையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். ‘கொஞ்சம் கொஞ்சமா அஞ்சலி நம்மை விட்டுட்டு போறா’ என்று டாக்டர் சொன்ன பிறகு ‘அம்மா’ என்றழைக்கும் அஞ்சலியிடம் ‘இப்ப போய் கூப்பிடறியே’ என்று முத்தமழை பொழியும் காட்சியில் ரேவதியின் உருக்கமான நடிப்பைப் பார்த்து நம்மால் கலங்காமல் இருக்க முடியாது. தான் ஒரு நடிப்பு ராட்சசி என்று ரேவதி நிரூபித்த படங்களுள் ஒன்று ‘அஞ்சலி’.
ஷாம்லியை ‘அஞ்சலி’யாக மாற்றிய மேஜிக்
அஞ்சலி பாப்பாவாக ஷாம்லியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இயக்குநரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். துருதுருவென்று அழகாக இருக்கும் ஒரு பெண் குழந்தையை, மூளை வளர்ச்சிக் குறைபாடுள்ளவளாகக் காட்டுவது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஒரு கட்டத்தில் இது சரியாக வருமா என்று சந்தேகமே மணிரத்னத்திற்கு வந்துவிட்டது. இதே போன்ற சவாலை எதிர்கொள்ளும் ஒரு பெண் குழந்தையின் வீடியோ ஷாம்லிக்கு அடிக்கடி போட்டுக் காட்டப்பட்டது. ஷாம்லியின் தந்தை இதற்காக மிகவும் மெனக்கெட்டார். குழந்தை இயல்பாக நடப்பதை விடவும் சுவரைப் பிடித்துக் கொண்டு நடந்தால் கேரக்ட்டருக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற ஐடியா ‘வொர்க்அவுட்’ ஆனது. ஷாம்லியை பல்வேறு விதமாகப் படம்பிடித்து அதில் தேவையானவற்றை உபயோகித்துத் தான் நினைத்திருந்த உணர்வுகளைக் காட்சிகளாக மாற்றினார் மணிரத்னம். ‘அஞ்சலி… அஞ்சலி’ பாடலில் ஒரு இலையைக் கையில் பிடித்து வேடிக்கை பார்த்தபடி ஷாம்லி அமர்ந்திருக்கும் காட்சி அத்தனை அற்புதமாக இருக்கும்.
ஷாம்லியின் அண்ணனாக தருணும் அக்காவாக ஸ்ருதியும் தங்களின் சிறப்பான நடிப்பைத் தந்திருந்தார்கள். குறிப்பாக க்ளைமாக்ஸில் ‘ஏந்திரி அஞ்சலி… ஏந்திரு…’ என்று தொடர்ந்து கத்துவதின் மூலம் அந்தக் காட்சியை மறக்க முடியாததாக மாற்றினாள் ஸ்ருதி. (இந்தச் சிறுமி இப்போது எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார்?!). ஷாம்லியின் அண்ணன் ரிச்சர்ட், இயக்குநர் விஷ்ணுவர்தன், சவுண்ட் இன்ஜினியர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, காமெடி நடிகை ஆர்த்தி என்று இப்போது பிரபலமாக இருக்கும் பலரை இந்தப் படத்தில் சிறார்களாகக் காண முடியும். தருண் பிறகு தெலுங்கில் ஹீரோவாக ஆனார்.
பிள்ளைகளின் காதல் தொடர்பாக ‘பூர்ணம்’ விஸ்வநாதனுக்கும் வி.கே.ராமசாமிக்கும் இடையில் நடக்கும் காமெடி சண்டைகள் சுவாரஸ்யமானது. அபார்ட்மென்ட்வாசியாக அனந்து சில காட்சிகளில் வந்து போனார். மனைவிக்குப் பயந்த ஆசாமியாக சாருஹாசன் நடித்தார். மூளை வளர்ச்சி குறைபாடுள்ளவராக சில காட்சிகளில் வந்தாலும் அதை மறக்க முடியாத கதாபாத்திரமாக்கினார் ஜனகராஜ். அந்தக் குடியிருப்பில் ‘கொலைகாரனாக’ நிழலுருவமாக உலவும் கேமியோ ரோலில் நடித்திருந்தார் பிரபு. மற்றவர்கள் இவரைப் பார்த்து அஞ்சும் போது இவரது பிளாட்டைத் தேடி வந்து அஞ்சலி அன்பைச் செலுத்துவாள். பிரபுவிற்கும் ஒரு மகள் இருப்பதாக ஒரு காட்சியில் போகிற போக்கில் காட்டியிருப்பது திரைக்கதையின் திறமைக்கு ஒரு சான்று. ‘உங்க குழந்தை இந்த பில்டிங்கில் இருக்க வேணாம்’ என்று சொசைட்டி மீட்டிங்கில் சக குடியிருப்பு வாசிகள் ஆட்சேபம் எழுப்பும் போது அவர்களிடம் பிரபு வெடிக்கும் காட்சி சிறப்பானது.
மணிரத்னம் + மது அம்பாட் = புதிய கூட்டணி
அதுவரை பி.சி.ஸ்ரீராமிடம் கூட்டணி வைத்திருந்த மணிரத்னம், ஒரு மாறுதல் முயற்சிக்காக மது அம்பாட்டை ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். இந்தப் படத்தின் சிறப்பிற்கு ஒளிப்பதிவு ஒரு முக்கியமான பங்கு வகித்திருந்தாலும் ‘மணிரத்னம் இருட்டில் படம் எடுப்பவர்’ என்கிற கிண்டல் உருவாவதற்கு ‘அஞ்சலி’ படம் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. அபார்ட்மென்ட்டின் இன்டோர் காட்சிகள் பெரும்பாலும் ஹாலிவுட் தன்மையுடன் அமைந்திருக்கும். ஓர் ஆரோக்கியமான குழந்தையை நல்ல வெளிச்சத்தில் குறைபாடுள்ள குழந்தையாகக் காட்டுவது சிரமம். எனவே குறைவான வெளிச்சத்தில் காட்டுவதின் மூலம் மழுப்பிவிட முடியும் என்பதுதான் ‘ஒளிப்பதிவு டெக்னிக்’கின் ஐடியாவாக இருந்திருக்கலாம்.
‘ஸ்டார் வார்ஸ்’ மற்றும் ‘வேகம்… வேகம்’ ஆகிய இரண்டு பாடல்களும் ‘பேண்டஸி’ பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். இன்றைக்குப் பார்க்கும் போது கிராஃபிக்ஸ் பணி சுமாராக இருப்பது போல் தெரிந்தாலும் அந்தக் காலகட்டத்தில் நிச்சயம் இதுவொரு சாதனை. இந்தப் படத்தில் வரும் அபார்ட்மென்ட் கட்டடம் தோட்டா தரணியால் ‘செட்’ ஆகப் போடப்பட்டது என்கிற தகவல் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். அபார்ட்மென்ட் கலாசாரம் அசுர வேகத்தில் பரவிக் கொண்டிருந்த எண்பது, தொண்ணூறுகளின் பின்னணியை இதில் சிறப்பாகப் பிரதிபலித்திருந்தனர்.
அதிகப்பிரசங்கிகளாகச் சித்திரிக்கப்படும் சிறார்கள்?
மணிரத்னத்தின் படங்களில் சித்திரிக்கப்படும் சிறார்களின் மீது பொதுவாகவே ஒரு புகார் உண்டு. ‘ரொம்ப ஓவரா பெரியவங்க மாதிரி பேசறாங்க’. இதிலும் அப்படியான காட்சிகள், வசனங்கள் உண்டு. ரகுவரனின் குடும்பம் ஒருவரையொருவர் துரத்திக் கொண்டு படிக்கட்டில் ஓடும் சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஆட்சேபிப்பார்கள். “‘சரிதான் போய்யா. சொட்டைத் தலையா’ன்னு சொல்லிடவா?” என்று குறும்பாகக் கேட்பாள் அனு. அங்குள்ள ஒரு காதல் ஜோடியை ஜாலியாகக் கண்காணித்துச் சேர்த்து வைக்கும் ‘பெரிய’ வேலையைக் குழந்தைகள் செய்வார்கள். ‘பெரிய மனிதர்கள்’ போல் குழந்தைகள் பேசும் புகார் குறித்து மணிரத்னத்திடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது,
ஒருவகையில் மணிரத்னம் சொல்வது உண்மை. நீங்கள் பெரியவர்களின் உலகிலிருந்து இறங்கி வந்து குழந்தைகளின் உலகில் புகுந்து அவர்கள் பேசுவதைக் கேட்டால் பல விஷயங்கள் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். குழந்தைகள் தங்களின் எண்ணங்களை மிக நேர்மையாக, பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி விடுபவர்கள். பெரியவர்கள் போல் மழுப்பி பாசாங்கு செய்வதில்லை. அஞ்சலி வீட்டுக்குள் வந்ததும் அவளை வெறுக்கும் அர்ஜுனும் அனுவும் ‘அஞ்சலி பாப்பா செத்துப் போகணும்’ என்று கடவுளை வேண்டிக் கொள்வார்கள். மனமாற்றம் ஏற்பட்ட பிறகு இதே மாதிரியான காட்சி வரும். ‘அஞ்சலி பாப்பா சாகக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்’ என்று பேசிக் கொள்வார்கள். ஒரு குறிப்பிட்ட வசனத்தை வெவ்வேறு சூழலில் பயன்படுத்துவது மணிரத்னத்தின் ஸ்டைல். (நீங்க தொட்டா கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு’!).
சில திரைப்படங்களை ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பார்க்கும் போதுதான் திரைக்கதை அமைக்கப்பட்டதன் புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொள்ள முடியும். அஞ்சலியிலும் அப்படிப்பட்ட காட்சிகள் உண்டு. மூளை வளர்ச்சியற்ற ஜனகராஜின் அறிமுகக் காட்சியில் அவர் ‘ஹோ’வென்று கத்தி விளையாடுவதைப் பார்த்து ‘ஹே… பைத்தியம்’ என்று பால்கனியில் இருந்து கத்துவாள் அனு. கோபப்படும் ரகுவரன் தன் குழந்தையைச் சட்டென்று கன்னத்தில் அறைந்து விடுவார். ‘ஏன் சேகர்… நீங்க குழந்தைகளை இதுவரைக்கும் அடிச்சதே இல்லையே?’ என்று அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாகக் கேட்பார் ரேவதி. இறுக்கமான முகத்துடன் மௌனமாக இருந்துவிடுவார் ரகுவரன். முதன்முறை பார்க்கும் போது இந்தக் காட்சியின் பின்னணி நமக்குப் புரியாது. ஆனால் இரண்டாம் முறை பார்க்கும் போதுதான் ‘அஞ்சலி’ பற்றிய ரகசியம் ரகுவரனுக்கு மட்டும்தான் தெரியும் என்பதும், அதனால்தான் அவருக்கு உடனடியாக கோபம் வந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
படத்திற்குப் பலமாக அமைந்த ராஜாவின் இசை
இளையராஜாவின் இசை என்பது நீர் மாதிரி. எந்த வடிவத்திற்குள் இடுகிறோமோ, அந்த வடிவத்திற்கு ஏற்ப தன்னை உருமாற்றிக் கொள்ளும். மணிரத்னத்துடன் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் ராஜாவின் இசை மிக நவீனமாகவும் ஸ்டைலிஷாகவும் ஆகிவிடுவதைக் கவனிக்கலாம். ‘அஞ்சலி’ திரைப்படத்தின் பாடல்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சிறார்கள் சம்பந்தப்பட்ட ஆட்டம், கொண்டாட்டம் காட்சிகளில் அதிகம் உண்டு என்பதால் பெரும்பாலான பாடல்களைச் சிறார்களே அதிகம் பாடினார்கள். அவர்கள் யார் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். யுவன்சங்கர் ராஜா, பவதாரிணி, கார்த்திக் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி என்று அப்போது சிறார்களாக இருந்த ராஜா குடும்பத்தின் பிள்ளைகளே பாடினார்கள்.
‘ராத்திரி நேரத்து’ என்கிற ஸ்டார் வார்ஸ் பாடலை வித்தியாசமான டோனில் பாடி பிறகு தொண்டை வலியால் அவதிப்பட்டார் எஸ்.பி.பி. ‘வேகம்… வேகம்…’ என்கிற பாடலை தனது பிரத்யேகமான குரலில் பாடி கவர்ந்தார் உஷா உதூப். ‘இரவு நிலவு’ என்கிற பாடலை குழந்தைகளுடன் இணைந்து பாடினார் எஸ்.ஜானகி. பாடல்களில் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் வழக்கம் போல் ராஜாவின் பங்களிப்பு அருமையாக இருந்தது. குறிப்பாக அஞ்சலி தன்னை ஏற்றுக் கொள்ளவில்லையே என்று ரேவதி ஏக்கப்படும் காட்சிகளில் ஒலிக்கும் பின்னணி இசை அனைத்துமே தாய்மையின் உருக்கத்தை அற்புதமாக வெளிப்படுத்தும்.
வழக்கமான ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டிருந்தாலும் தனது பிரத்யேகமான பாணியைக் கொண்ட இயக்கத்தினால் பெரும்பாலான காட்சிகளைச் சுவாரஸ்யமாக அமைத்திருப்பார் மணிரத்னம். சிறப்புக் குழந்தைகளை இந்தச் சமூகம் எவ்வித மனத்தடையுமின்றி இயல்பாக அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற செய்தியை, ஒரு மெயின்ஸ்டீரிம் சினிமாவில் தொண்ணூறுகளின் காலகட்டத்திலேயே உரையாடியதற்காக மணிரத்னம் பாராட்டப்பட வேண்டியவர். இன்றும் கூட பார்த்து ரசிக்கும் வகையில் புத்துணர்ச்சியுடனும் சுவாரஸ்யமாகவும் அமைந்திருக்கிற திரைப்படமான ‘அஞ்சலி’, ஆமிர்கான் இயக்கி நடித்த ‘தாரே ஜமீன் பர்’ போன்ற படங்களின் முன்னோடி எனலாம்.