பியாங்யாங்: வடகொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகொரியாவில் தற்கொலை செய்து கொள்பவரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், இந்த உத்தரவை கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளார்.
உலகின் மர்ம தேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. வடகொரியாவில் என்ன நடக்கிறதே என்று வெளி உலகிற்கு தெரியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் கடும் மோதல் போக்கை கையாண்டு வருபவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். அந்த நாட்டில் என்ன நடக்கிறது, மக்களின் வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பது கூட அந்த நாட்டிற்கு மட்டுமே வெளிச்சம்.
ஊடகங்களுக்கு கட்டுப்பாடு, சமூக வலைத்தளங்களுக்கு அனுமதி இல்லை என சர்வாதிகார ஆட்சியை அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நடத்தி வருகிறார். அதுபோக சிறிய குற்றங்களுக்கு கூட மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். அதுமட்டும் இன்றி எந்த மாதிரியான உடை அணிய வேண்டும். முடிகள் இப்படித்தான் வெட்ட வேண்டும் என்பதில் கூட பல கட்டுப்பாடுகள் வடகொரியாவில் உள்ளதாம்.
கிம் ஜாங் உன்னின் தந்தை இறந்த தினம் வந்தால் அன்றைய தினம் யாரும் சிரிக்கக் கூடாது என்ற அளவுக்கு பல விசித்திரமான கட்டுப்பாடுகள் அந்த நாட்டில் உள்ளன. அதுபோக வெளிநாட்டு சினிமாக்கள் பார்ப்பதற்கு தடை.. குறிப்பாக கொரிய சீரியல்கள் பார்ப்பதற்கு கூட நாட்டு மக்களுக்கு அனுமதி கிடையாது. இப்படி பல வினோதமான கட்டுப்பாடுகளையும் அடாவடியான உத்தரவுகளையும் விதிக்கும் வடகொரியா, கடுமையான பஞ்சத்தால் தவித்து வருவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
வடகொரியா ஒருபக்கம் கடுமையான பஞ்சத்தில் தவித்து வந்தாலும் தொடர்ந்து அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை என ஏவுகணைகளை சோதித்து அடாவடி காட்டி வருகிறார் கிம் ஜாங் உன். கடுமையான பசி, பஞ்சத்தால் மக்கள் தவித்து வரும் நிலையில், வடகொரியாவில் மக்கள் தற்கொலை செய்து கொள்வது கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தென்கொரிய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக தென்கொரிய உளவு அமைப்புகள் கூறும் போது, ” வடகொரியாவில் உள்நாட்டில் கடும் குழப்பமான மற்றும் அமைதியின்மை நிலவுகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இதனால், மக்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று கூறியதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்கொலை செய்து கொள்வது சோசலிசத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.