இக்கட்டான நேரங்களில் ஒருவர் செய்யும் உதவியை மறக்க முடியாது. அந்த வகையில் தான் ஆட்டோ ஓட்டுநரிடம் கடன்பட்ட 100 ரூபாய் தொகையை, 30 வருடங்கள் கழித்து 10,000 ரூபாயாகக் ஆசிரியர் ஒருவர் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்த 62 வயதான ஆட்டோ ஓட்டுநர் பாபுவை, அடையாளம் தெரியாத 53 வயதுள்ள நபர் ஒருவர் சந்தித்துள்ளார். பாபுவிடம் ஒரு கவரை கொடுத்து, அது அவருக்கானது எனக் கூறியுள்ளார். அந்த கவரை பிரித்துப் பார்த்த பாபு அதிர்ந்துள்ளார். கவரினுள் பல ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.
இந்த பணம் எதற்கு எனக் கேள்வி எழுப்ப, அதற்கு `என்னை நியாபகம் இல்லையா’ எனத் தன்னை அஜித் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர், கடந்த கால சம்பவத்தை விளக்கி இருக்கிறார்.
`1993-ல் கோட்டயம் சங்கனாச்சேரியில் உள்ள கல்லூரியில் இளங்கலை படித்து வந்தேன். மூவாற்றுப்புழா அருகில் உள்ள மங்கலத்து நடை என்ற இடத்தில் வசித்து வந்த என்னுடைய நண்பரைப் பார்க்கச் சென்றேன்.
சந்திப்பை முடித்து விட்டு மூவாற்றுபுழா செல்ல நினைக்கையில் பஸ் கிடைக்கவில்லை. ஆட்டோவில் செல்லவும் என்னிடம் பணம் இல்லை. அப்போது உங்கள் ஆட்டோவில் பயணித்து விட்டு பிறகு 100 ரூபாயைத் தருகிறேன். இதைக் கடனாகவே வைத்துக் கொள்ளுங்கள் என்றேன்.
தற்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். பலமுறை ஆட்டோ கட்டணத்தைத் திருப்பி தர முயற்சித்துள்ளேன். அந்த காலத்தில் அது மிகப்பெரிய உதவி. 30 ஆண்டுகள் கழித்து உங்களைச் சந்திக்க முடிந்தது. நூறு ரூபாய்க்குப் பதில் , 10,000 ரூபாயாகக் கொடுத்துள்ளேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நினைவுக்கு வரவே, கொடுத்த தொகையை வாங்க மறுத்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர். விடாப்பிடியாக அந்த தொகையைக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார் அந்த ஆசிரியர். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடன் வாங்கிவிட்டு பலர் ஏமாற்றி வரும் நிலையில், 30 வருடங்களுக்கு முன் சவாரி செய்த ஆட்டோவின் கட்டணத்தை அப்படியே 100 மடங்காகத் திருப்பி கொடுத்த இவரின் செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது…
அந்த மனசுதான் சார் கடவுள்!