அரசாங்க நிதிக்குழுவின் புதிய தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி முன்மொழிவு
இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக “கணினி செயலிகளை ” உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் அரச நிறுவனங்களுக்காக “கணினி செயலிகளை” உருவாக்கும் பணி தனியார் நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனங்களினாலேயே இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் 01 ஆம் இலக்க குழு அறையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்க நிதிக்குழுவின் புதிய தலைவராக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பி கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு முன்மொழிந்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களுக்கான தலைவர்கள் நியமனம், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்காக ஹர்ஷ டி சில்வாவின் பெயரும் வேறு சில உறுப்பினர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டன. மயந்த திசாநாயக்க எம்.பி தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் எதிர்க்கட்சிகள் முன்மொழிவதாக இருந்தால், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அரச நிதிக்குழுவின் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும். ஐஎம்எப் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் அதற்கமைய எதிர்காலத்தில் செயல்பட வேண்டும்.
குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களின் விதிகள் குறித்து அந்தக் குழுக் கூட்டங்களில் எம்.பி.க்கள் கூடி முடிவு எடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் குழுக் கூட்டத்திற்கு இடமில்லை என்றால் எமக்கு வேறு கட்டிடம் ஒன்றை பெறமுடியும். இதில் பங்கேற்பவர்களுக்கு தனியான கொடுப்பனவு செலுத்த முடியும். பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் முன்னர் குழுக்களில் குறைந்தது ஒரு வாரமாவது ஆராய்ந்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வுடன் முன்வைக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். நாளை சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்தை இன்று எம்.பி.க்களிடம் கொடுத்தால் பயனில்லை. அதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது எம்.பி.க்களுக்கு அவகாசம் கொடுப்பது உகந்தது.
உலக வங்கி உதவியின் கீழ் இடைக்கால வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவ நிதி பெறப்பட்டுள்ளது. அதைத் தொடர உங்கள் உதவி தேவை. குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் பொறுப்புகளை குழுவில் கூடி முடிவு செய்து வழங்க வேண்டும்.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் உள்ளூராட்சி சபை மட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் (DRO) இருந்தனர். இந்தியாவில் வசூல் செய்யும் அதிகாரிகள் இருந்தனர். ஆனால் இலங்கையில் பிரதேச செயலகங்கள் விரிவடைந்ததும் மாவட்ட வருவாய் உத்தியோகத்தர்கள் காணாமல் போனார்கள்.
அதற்காக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அதிகாரிகள், அரசுக்கு வருவாயை வசூலிக்காமல், அரசின் பணத்தை செலவழித்தனர். எனவே, வருவாய் வசூலிக்க, குறைந்தபட்சம் இருநூறு மாவட்ட வருவாய் அலுவலர்களையாவது அரசாங்கம் நியமிக்க நேரிடும்.
மேலும், இதுவரை அரசு நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான கணினி செயலிகளை உருவாக்குவது தனியார் துறையால் மேற்கொள்ளப்பட்டது. அதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான டிஜிட்டல் மேம்பாட்டு முகவர் நிறுவனம் உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்படி, எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கான கணினி செயலிகள் யாவும் அந்த நிறுவனங்களினால் உருவாக்கப்படும். மேலும், பட்ஜெட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன், அரசின் பணம் எப்படி செலவிடப்பட்டது என்பது குறித்து, துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா,
அரசாங்க நிதி தொடர்பான குழுவின் புதிய தலைவராக என்னை நியமித்தமைக்காக நான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நோக்குடன் நிதிக்குழுவில் நாம் கேள்வி எழுப்பவில்லை. சரியான பாதைக்கு திருப்பவே அவ்வாறு செய்தோம். இடைக்கால வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவுவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திடம் இருந்து நிதியைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,
பாராளுமன்றத்தில் 73 குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்கள் செயல்படுகின்றன. மனித வளமும், பௌதீக வளங்களும் அதற்கு போதுமானதாக இல்லை. குழுக்களின் ஊடாக விரைவான திட்டம் தேவையானால் உள்கட்டமைப்புவசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே,
குழுக்கள் மற்றும் ஆலோசனை குழுக்களுக்கு முக்கிய பங்கு வகிக்க முடியும். ஆனால் அவற்றுக்கு நியமிக்கப்படும் பிரதிநிதிகள் அந்தச் செயற்பாட்டை விட அரசியல் செயற்பாட்டை தான் மேற்கொள்கின்றனர். ஊடக கண்காட்சி நடத்தி ஊடகங்களுக்குப் பேச முயற்சிக்கின்றனர். அதை விடுத்த திட்டம் ஒன்று அவசியம். இங்கு உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் உள்ளன என்றார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கல்வி அமைச்சரும் சபை முதல்வர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ்.சமரதுங்க, ஜனாதிபதியின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளர் பேராசிரியர் அஷு மாரசிங்க மற்றும் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.