மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அவசர உதவியாக பக்கத்து வீட்டில் குடியிருந்தவருக்கு கொடுத்த பணம் மற்றும் நகையை திருப்பிக் கேட்டும் தராத விரக்தியில் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்த குமார் என்பவர் 2015 ஆம் ஆண்டு குடும்பத்துடன் காமராஜர்புரம் பகுதியில் குடியிருந்தபோது, அதே காம்பவுண்டில் வசித்த லட்சுமி என்பவரின் குடும்பத்தினருடன் உறவினர்கள் போன்று பழகியுள்ளனர்.
அதன் காரணமாக, 10 சவரன் நகைகள் மற்றும் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வரை பணத்தை லட்சுமிக்கு அவசர உதவியாக கொடுத்துள்ளார். பிறகு, அதனை பலமுறை கேட்டும் திருப்பித் தராமல் லட்சுமியும், அவரது குடும்பத்தினரும் இழுத்தடித்த நிலையில் குமார் விரக்தியடைந்து பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கு முன்பாக, செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ள குமார், தான் இறந்த பிறகு நகைகள், பணத்தினை மீட்டு தனது மனைவிக்கு கொடுத்து உதவுமாறு தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.