புதுடெல்லி: “உத்தரப் பிரதேசத்தில் தொடரும் படுகொலைகள் உங்களுக்கு கவலை தரவில்லையா?” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக போலீசாரால் அழைத்து வரப்பட்ட ரவுடி சஞ்சீவ் ஜீவா, நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “இதுதான் ஜனநாயகமா? ஒருவர் யாரால் கொல்லப்பட்டார் என்பது அல்ல முக்கிய கேள்வி. ஒருவர் கொல்லப்படுகிறார் என்றால் பாதுகாப்பு இருக்கிறதா, சட்டம் – ஒழுங்கு இருக்கிறதா என்பதுதான் முக்கிய கேள்வி” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உத்தரப் பிரதேசத்தில் 2017 முதல் 2022 வரை காவல் துறை விசாரணையில் இருந்த 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது காவல் துறை விசாரணையில் இருந்த ஜீவா, லக்னோ நீதிமன்றத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதற்கு முன் அடிக் அகமது, அஷ்ரப் ஆகியோரும் போலீஸ் காவலில் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டனர். துல்லு தேஜ்புரியா என்பவர் திகார் சிறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமித் ஷா ஜி, இது குறித்து உங்களுக்கு கவலை இல்லையா? நாங்கள் இருக்கிறோம்!” என தெரிவித்துள்ளார்.
சஞ்சீவ் ஜீவாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். 24 வயதாகும் அவரது பெயர் விஜய் யாதவ் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வழக்கறிஞரைப் போல் உடை உடுத்திக் கொண்டு அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், 6 குண்டுகளை அவர் சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் ஜீவா, வழக்கு விசாரணைக்காக நேற்று லக்னோ சிவில் நீதிமன்றத்திற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காவல் துறை விசாரணையின் கீழ் இருந்த அடிக் அகமதுவும் அஷ்ரப்பும் பிரயாக்ராஜ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதி அழைத்துச் செல்லப்பட்டபோது செய்தியாளர்கள் போல் வந்த 3 பேர், இருவரையும் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் நடந்து 2 மாதத்துக்குள் தற்போது மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.