ஊரார் பணத்தை ஏமாற்றியதால் ஆத்திரம்…. மரத்தில் கட்டிவைத்து உரித்த சம்பவம்…!

அரக்கோணம் அருகே ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நெமிலி பிரிவு மேனேஜரைத் தேடி வந்த முதலீட்டாளர்கள், நள்ளிரவில் அவரது சகோதரரை மரத்தில் கட்டி வைத்து, தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இருப்பதை விட்டுவிட்டு, பறப்பதற்கு ஆசைப்பட்ட மக்களிடம் லட்ச ரூபாய்க்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி கோடிகளை சுருட்டியவரை கட்டிவைத்து ஊர் கூடி உரித்து எடுத்த காட்சிகள் தான் இவை..!

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்துள்ளது சயனபுரம் கிராமம்… இந்த சிற்றூரைச் சேர்ந்த சிலரும், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சிலரும் ஒன்றுசேர்ந்து, நள்ளிரவில், இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கும் தகவல் அறிந்து போலீசார் விரைந்தனர்

விரைந்து வந்து மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த இளைஞரை மீட்ட அரக்கோணம் ASP யாதவ் கிரிஷ் அசோக் தலைமையிலான போலீசார், தாக்குதல் நடத்தியவர்களிடம் விசாரித்தனர்

தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் ஆருத்ரா நிறுவன நெமிலி பிரிவு முதலீட்டாளர்கள் என்பது தெரியவந்தது. தாக்குதலுக்குள்ளானவர் பணத்துடன் கம்பி நீட்டிய சதீஷ் என்பதும் தெரியவந்தது.

ஆருத்ராவின் நெமிலி பிரிவு இயக்குநரான சதீஷ்குமார் காஞ்சிபுரம் மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேனேஜராக இருந்த, சயனபுரம் கிராமத்தைச் சேர்ந்த யோகானந்தம், அவரது சகோதரரான சதீஷ் ஆகியோர் மூலமாகவும் சயனபுரம் கிராம மக்கள், லட்சம், லட்சமாக பணம் கட்டியதாக கூறப்படுகின்றது.

இவர்களில் பணத்துடன் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த சதீஷ், நள்ளிரவில் ஊர் திரும்பியதை அறிந்த, ஆருத்ரா முதலீட்டாளர்கள், அந்த நபரை பிடித்து, மரத்தில் கட்டிவைத்து, தங்கள் பணம் எப்போது கிடைக்கும் என கேட்டுத் தாக்கியதாக, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.