சென்னை: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பாதுகாப்பு ஆணையர் நடத்தும் விசாரணை மட்டுமே முறையான விசாரணையாக இருக்கும் என்று ரயில்வேயில் ஓய்வு பெற்ற நிலைய கண்காணிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரயில்வேயின் ஓய்வு பெற்ற நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் கூறியதாவது: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்தும் விசாரணை மட்டும்தான் முறையான விசாரணை. விபத்து தொடர்பாக முதல் கள நிலவர அறிக்கையே இதுதான். இந்த களநிலவர விசாரணையில் எல்லா துறை அதிகாரிகளும் ஈடுபடுவார்கள். விபத்துகளுக்கு தங்கள் துறை குற்றமில்லை என்று அதிகாரிகள் சொல்வது வழக்கமான ஒன்றுதான்.
ஒருவருடைய கருத்து மாறுபட்டு இருப்பது ஆச்சரியம் இல்லை. மாறுபட்ட கருத்து கூறியவர் ஒரு சிக்னல் பொறியாளர். சிக்னல் பிரிவு மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. அதை மறுப்பவர் சிக்னல் பொறியாளர். இன்டர்லாக்கிங் சிஸ்டமை பொறுத்தவரை ஒரு ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டு விட்டால் அதை மாற்ற அனுமதிக்காது.
அந்த வாதத்தின் அடிப்படையில், கோரமண்டல் ரயிலுக்கு சிக்னல் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகையால், இன்டர்லாக்கிங்கில் எந்த தவறும் இல்லை என்றும் தனது துறை மீது குற்றமில்லை என்றும் மறுக்கிறார். இதுவே அதிகாரிகள் அறிக்கையில் முரண்பாட்டுக்கு காரணம். இவ்வாறு ஓய்வு பெற்ற நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் கூறினார்.