மூணாறு: கேரளாவில் அரிகொம்பன் யானையை தொடர்ந்து படையப்பா மற்றும் மாங்கா கொம்பன் யானைகள் குறித்த தகவல்கள் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து கொண்டிருக்கின்றன.
கேரளாவின் மூணாறு சின்னக்கானல் வனப்பகுதியை சேர்ந்த அரிகொம்பன் அல்லது அரிசி கொம்பன் யானை மூர்க்கமாக 10 பேரை மிதித்து கொன்றது. இதனைத் தொடர்ந்து நகர்வலம் வந்த அரிகொம்பன் பிடிக்கப்பட்டு கேரளா வனத்துறையினரால் தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்குள் அரிகொம்பன் ஊடுருவியது. தமிழ்நாட்டின் கம்பம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரிகொம்பன் ஒரு வாரகாலமாக மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் 144 தடை உத்தரவு போடும் நிலை உருவானது. இதனையடுத்து ஒருவழியாக மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யானை, களக்காடு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மூணாறு சின்னக்கானல் மக்கள், தங்களது வனப்பகுதியிலேயே அரிகொம்பனை கொண்டு வந்துவிட கோரி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக வழக்கும் கூட நடைபெற்றது.
படையப்பா: அரிகொம்பனைத் தொடர்ந்து படையப்பா யானை குறித்த தகவல்கள் இப்போது பேசுபொருளாகி இருக்கின்றன. கேரளாவின் மூணாறு சொக்கநாடு பகுதியில் முகாமிட்டிருக்கிறது படையப்பா யானை. இதனது ஒரே வேலை அப்பகுதியில் அரிசி கடையை உடைத்து உணவுப் பொருட்களை சாப்பிடுவதுதான். அதுவும் சொக்கநாடு உண்ணி மேரி என்பவரது அரிசி கடையைத்தான் படையப்பா யானை இலக்கு வைத்து தாக்குகிறதாம். இதுவரை 20 முறை உண்ணி மேரி கடையை பதம் பார்த்துவிட்டதாம் படையப்பா யானை.
மாங்கா கொம்பன்: அட்டப்பாடி சித்தூர் வனப்பகுதியில் இப்போது மாங்கா கொம்பன் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதாவது அப்பகுதிக்கு வந்து போகும் யானை நாள்தோறும் மாம்பழ வேட்டை நடத்துவதால் மாங்கா கொம்பன் என பெயர் சூட்டியிருக்கின்றனர் பொதுமக்கள். அட்டப்பாடி சித்தூர் அருகே முகாமிட்டுள்ள மாங்கா கொம்பன் தொடர்பாக கேரளா வனத்துறைக்கு தகவல் தரப்பட்டுள்ளதாம். இப்போது படையப்பா மற்றும் மாங்கா கொம்பன் யானைகள்தான் கேரளா வனப்பகுதிகளில் ஹீரோக்களாக வலம் வருகின்றன.