தலைமை செயலாளர் இறையன்பு ஜூன் மாதத்துடன் பணி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி கோட்டை வட்டாரத்தை சுற்றி தொடர்ந்து எழுந்து வருகிறது.
ஓய்வுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இறையன்பு தனக்கு வழங்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் ஆகியோர்களிடம் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக முதற்கட்டமாக தருமபுரி, மதுரை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் செய்தித் துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மணிமண்டபங்கள் மற்றும் நூலகங்களை தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடந்த மாதம் ஆய்வு செய்தார். அப்போது, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவுசார்ந்த புத்தகங்கள் அதிகமாக இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன் அடிப்படையில், இந்த நூலகங்களில் போட்டித் தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தனக்கு வழங்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட அறிவுசார்ந்த புத்தகங்களை செய்தித் துறை செயலர் இரா.செல்வராஜ், செய்தித் துறை இயக்குநர் த.மோகன் ஆகியோரிடம் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார்.
இந்த புத்தகங்கள் மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளன. மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இந்நூலகங்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.