ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த கோர ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒருபக்கம் இழப்பீட்டுத் தொகையை அளித்துவர, இன்னொரு பக்கம் விபத்து குறித்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பா.ஜ.க அரசு தங்கள் பக்கம் இருக்கும் தவறை மறைக்கவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடிவருகின்றன.
இந்த நிலையில் ஒடிசாவில் நேற்று மீண்டும் ஒரு சோக சம்பவமாக, கனமழைக்கு ஒதுங்கிய ஒப்பந்த தொழிலாளர்கள் மீது சரக்கு மோதி 6 பேர் பலியாகியிருக்கின்றனர்.
முன்னதாக நேற்று மாலை ஒடிசாவின் ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலை ரயில் நிலையத்தில் கனமழை காரணமாக ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் இன்ஜின் இணைக்கப்படாமல் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் கீழ் ஒதுங்கியிருக்கின்றனர்.
அப்போது, கனமழையுடன் காற்று பலமாக வீசியதையடுத்து நகர்ந்த சரக்கு ரயில் பெட்டிகள் மழைக்கு ஒதுங்கியிருந்த தொழிலாளர்களை நசுக்கியது. இதில் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த இரண்டு பேர் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பேசிய ரயில்வே செய்தித் தொடர்பாளர், “நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பக்கவாட்டில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். திடிரென கனமழை பெய்ய தொழிலாளர்கள் இன்ஜின் இணைக்கப்படாத சரக்கு ரயிலின் அடியில் தஞ்சமடைந்தனர். அப்போது, கற்று அதிகமாக வீச சரக்கு ரயில் நகர்ந்து விபத்து ஏற்பட்டது. ரயிலின் எதிர்பாரா நகர்வை அறியாத தொழிலாளர்கள் பரிதாபமாக நசுங்கி உயிரிழந்தனர்” என்று தெரிவித்தார்.
நாட்டிலேயே மிகப்பெரிய ரயில் விபத்து ஏற்பட்ட ஒருவரத்துக்குள் இப்படியொரு விபத்து ஏற்பட்டிருப்பது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.