மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள மீரா சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 32 வயது பெண்ணின் சிதைந்த உடல் நேற்று (ஜூன் 7) போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.
அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மனோஜ் சஹானி (56) என்பவர் பல துண்டுகளாக தனது துணையை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
சரஸ்வதி வைத்யாவும் (32) மனோஜ் சஹானியும் (56) கடந்த மூன்று ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். மீரா ரோடு பகுதியின் கீதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் நேற்று நயநகர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு அந்த தம்பதியரின் குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் செய்துள்ளனர்.
புகாரைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சரஸ்வதி வைத்யாவின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்ததை கண்டனர்.அவரின் உடலின் சில பாகங்களை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சஹானி தப்பிச் செல்ல முயன்றபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
“மீரா ரோடு பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் இருந்து, துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றினர். இங்கு ஒரு ஜோடி லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் பெண் வெட்டிக் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்று மும்பை துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் பஜ்பலே கூறியுள்ளார்.
இது குறித்து மும்பை மீடியாக்களில் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. அந்த நபர் அப்பெண்ணின் உடலை மரம் வெட்டும் இயந்திரத்தால் வெட்டினார் என்றும் மேலும் அவரது உடல் உறுப்புகளை குக்கரில் வேகவைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சஹானி கடந்த இரண்டு, மூன்று நாட்களில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை குடியிருப்புவாசிகள் பார்த்துள்ளனர். இது போல் நாய்களுக்கு உணவளிக்கும் பழக்கம் கொண்டவர் அல்ல என்றும் கூறப்படுகிறது. மேலும் உடல் உறுப்புகள் கழிவு நீர் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டதா என்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.