மதுரை வந்த பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, “அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு தொடரக்கூடாது. அவருக்கு பதிலாக கே.என்.நேருவை அறநிலையதுறை அமைச்சராக நியமிக்கலாம். அவர் நல்ல வைஷ்ணவர். கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டார்.
மாநிலக் கல்வியின் தரத்தில் குறைபாடு உள்ளது. எனவே அது தொடர்பாக ஆளுநர் பேசியதில் தவறில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் மாப்பிள்ளையை காப்பாற்றவே வெளிநாடு டூர் போனார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல.
ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமரை பதவி விலக சொல்பவர்கள், ஏன் கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லவில்லை? தமிழக டாஸ்மாக்கிலேயே கள்ளச்சாராயம் விற்கின்றனர்.
அனிதா உயிரிழந்த போது நீட் தேர்வுக்கு தடை விதிக்க சொன்ன ஸ்டாலின், தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வலியுறுத்தி ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்ட பின்னர் மொத்த டாஸ்மாக்கையும் மனிதாபிமான அடிப்படையில் மூடியிருக்க வேண்டாமா?
ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் சதிவேலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை முன் வைத்து நக்சலைட்கள் இன்னும் நிறைய சதிவேலைகள் நடத்த வாய்ப்பிருக்கிறது” என்றார்