ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , செம்பிறைச் சங்க சம்மேளனம் (IFRC) ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று (07) காலை நடைபெற்றது.
எதிர்வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளளத்தின் தலைவர்களுக்கான மாநாடு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் தெற்காசியாவிற்கான உலக அனர்த்த அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டதோடு (WDR 2022) அதன் பிரதியும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்க சம்மேளன சர்வதேச செயற்பாடு தொடர்பான அறிக்கையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் செஞ்சிலுவை சங்கத்தின் சட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பிலும் மேற்படி பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.
சட்டம் அமுலாக்கப்டுவதால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தை மேலும் பலப்படுத்திக்கொள்ள முடியும் என்பதோடு, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக சேவைகளை செயற்திறன் மிக்கதாக முன்னெடுக்க முடியும் என்றும் வலியுறுத்தினர்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தை பலப்படுத்துவதற்கும் அதனூடாக இலங்கை மக்களுக்கு கிடைக்கப்பெறும் நலன்களை ஊக்குவிப்பதற்கும் அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
மனிதானிமான நடவடிக்கைகளில் இலங்கை, சர்வதேச அமைப்புக்களுடன் இணங்கிச் செயற்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க, பணிப்பாளர் நாயகம் மஹேஷ் குணசேகர, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , செம்பிறைச் சங்க சம்மேளன ஆசிய பசுபிக் வலய பணிப்பாளர் அலெக்சாண்டர் மதேவ், சர்வதேச செஞ்சிலுவை செம்பிறைச் சங்கங்களின் தெற்காசியாவிற்கான பிரதி பணிப்பாளர் உதய ரெஷ்மி உள்ளிட்டவர்களும் தெற்காசியாவிலுள்ள எட்டு சர்வதேச செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்கங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.