சிறுமிகள் குழந்தை பெற்றுக் கொள்வது சர்வ சாதாரணம்.. மனுஸ்மிருதி படிங்க.. குஜராத் உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை:
சிறுமிகளுக்கு திருமணம் நடப்பதும், அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதும் அந்தக் காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்தது. மனுஸ்மிருதி படித்தால் இதை தெரிந்து கொள்ளலாம் என குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் சமீபகாலமாக நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகளும், தீர்ப்புகளும் பெரும் விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருகின்றன. சமீபத்தில் கூட கர்நாடகா உயர் நீதிமன்றம், “பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல” என தீர்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோன்ற ஒரு கருத்தை தான் குஜராத் உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்திருக்கிறது.

குஜராத்தை சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமி இளைஞர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டதால் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் பெற்றோர்களுக்கு பயந்து அவர் அதை வீட்டில் சொல்லவில்லை. 7 மாதத்துக்கு பிறகே சிறுமியின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, இந்த கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது, நீதிபதி சமீர் ஜே. தாவே முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

சிறுமியின் தந்தை தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, “உங்கள் மகள் கர்ப்பம் அடைந்திருக்கிறாள். அதற்காக ஏன் பதறுகிறீர்கள். அந்த காலத்தில் எல்லாம் 14 – 15 வயது சிறுமிகள் கூட திருமணம் செய்து குழந்தை பெற்றிருக்கிறார்கள். நீங்கள் மனு ஸ்மிருதியை படித்ததில்லை என நினைக்கிறேன். முதலில் அதை படியுங்கள். இந்த விஷயத்தில் சிறுமிக்கும், கருவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லையென்றால், கருக்கலைப்புக்கு இந்த நீதிமன்றம் அனுமதி வழங்காது. எனவே முதலில் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடுகிறேன்” எனக் கூறி வழக்கை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.