`தட்டிச்சென்ற அப்பாவு' முதல் `ட்ரீட்மென்ட் புள்ளியை எச்சரித்த மூத்தவர்’ வரை… கழுகார் அப்டேட்ஸ்

தென் கடைக்கோடி மாவட்டத்தின் மாநகரத் தந்தைக்கு எதிராக, சொந்தக்கட்சி கவுன்சிலர்களே படை திரட்டியதைப் பார்த்து மனிதர் ஆடிப்போய்விட்டாராம். பல மேயர்கள் கட்சி நடவடிக்கைக்கு ஆளாகிவரும் நேரத்தில் வெடித்திருக்கும் இந்தப் பிரச்னையால், எங்கே தனது பதவிக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற யோசனையில் தி.மு.க கவுன்சிலர்களை மட்டும் அழைத்து ரகசிய மீட்டிங் ஒன்றை நடத்தியிருக்கிறாராம் அந்த மூன்றெழுத்து மேயர். அப்போது கவுன்சிலர்களிடம், “ஏதாவது பிரச்னை என்றால் என்னிடமே நேரடியாகச் சொல்லுங்கள். நான் சரிசெய்துவிடுகிறேன்” என்று தன்மையாகப் பேசினாராம். “ஆரம்பத்திலேயே இப்படி குணமா கேட்டிருந்தா, நாங்க ஏன் பிரச்னை பண்ணப்போறோம்… அந்த ‘மூன்றெழுத்து’க்குத்தான் இந்தப் பாடுபடுறோம்” என்றார்களாம். “புரிகிறது. இனி நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கிடைக்கும்” என உறுதிமொழி கொடுத்திருக்கிறதாம் மேயர் தரப்பு. அப்புறமென்ன… வெள்ளைக்கொடி ஏந்தி விடைபெற்றிருக்கிறார்கள் கவுன்சிலர்கள்.

சிதறிக்கிடக்கும் ரத்தத்தின் ரத்தங்களையெல்லாம் ஓரணியில் திரட்டும் முயற்சிக்கான களமாக தனது இல்ல விழாவைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார் பணிவானவருக்கு துணையாக இருக்கும் ட்ரீட்மென்ட் புள்ளி. இவரது அழைப்பு காரணமாக, ட்ரிபிள் இனிஷியல் தலைவர் தன் கட்சி செயற்குழுக் கூட்டத்தையே தள்ளி வைத்ததாகச் சொல்கிறார்கள். அடுத்ததாக, மன்னார்குடிக்குச் சென்று இலைக் கட்சியில் ஒரு காலத்தில் கோலோச்சி இப்போது, ‘திவா’லாகிக் கிடப்பவரைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தாராம் ட்ரீட்மென்ட் புள்ளி. “ஏற்கெனவே அந்தப் புன்னகை மன்னனைச் சந்திச்சுட்டீங்கபோல… நீங்க அவரைப் பயன்படுத்தப் பார்க்குறீங்க. கடைசியில அவர் உங்களை கறிவேப்பிலையா பயன்படுத்திக்கப்போறாரு. சீறும் பாம்பைக்கூட நம்புங்க… அந்தச் சிரிப்புத் தலைவரை நம்பாதீங்க” என்று எச்சரித்துவிட்டாராம்.

தென்காசி மாவட்டம் தனியாகப் பிரிந்ததும், அங்கு ஏற்கெனவே செயல்பட்டுவந்த மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையை நாங்குநேரி தொகுதிக்கு மாற்ற முடிவுசெய்திருந்தது அரசு. ஆனால், மருத்துவமனையை அருகிலுள்ள தன் தொகுதியான ராதாபுரத்துக்கு மாற்றிக்கொண்டு செல்ல காய்நகர்த்திய சபாநாயகர் அப்பாவு, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டார். தன் தொகுதிக்கு வரவேண்டிய திட்டத்தை இப்படித் தட்டிப்பறித்துவிட்டாரே என்று நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரனுக்குக் கடும் ஆத்திரமாம்.

அப்பாவு

அண்மையில் நல்வாழ்வு அமைச்சர் இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியபோது, விழாவில் கலந்துகொள்ளாமல் தன் எதிர்ப்பைப் பதிவுசெய்த நாங்குநேரியார், கூடவே கதர் தொண்டர்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்கவிடாமல் தடுத்துவிட்டாராம்!

சென்னையில் ஐ.ஜி அந்தஸ்தில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரியின் பணியிடத்துக்குச் சமீபத்தில் வேறொருவர் நியமிக்கப்பட்டார். ஆனால், பழைய ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் புதிதாக எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாமல் இருந்தது. ‘முன்னாள் அமைச்சரோடு தொடர்புடைய முக்கியமான வழக்கில் இந்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கும் தொடர்பு இருப்பதால்தான் இவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை’ என கிசுகிசுத்தனர் போலீஸார்.

இந்த நிலையில், தற்போது இவர் மேற்கு மண்டல நகரம் ஒன்றில் பெரிய பொறுப்பில் நியமிக்கப்படவிருப்பதாகச் செய்திகள் கசிகின்றன. இதன் பின்னணியில் மேலிடத்து நிழலானவரின் சிபாரிசு இருக்கிறது என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில். ‘எந்தப் புகாரில் சிக்கியிருந்தாலும் நிழலானரின் ஆசியிருந்தால் போதும்… கேட்ட பதவி கிடைக்கும்போல…’ என்று ஐ.பி.எஸ் வட்டாரத்திலும் பொருமுகிறார்கள்.

‘ஜில்’ மாவட்டத்திலுள்ள முக்கிய ஏரி ஒன்றில், சாகசச் சுற்றுலா அமைக்கிறோம் என்ற பெயரில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தனியார் பங்களிப்புடன் சுற்றுலாத்துறையால் உருவாக்கப்படும் இந்தச் சாகசச் சுற்றுலா கட்டமைப்புக்குத் தனியார் நிறுவனம் ஒன்று கோடிகளைக் கொட்டிவருகிறதாம். கட்டுமானத்துக்குத் தேவையான அனுமதிகளைச் சரிவர வாங்காமல், துணிச்சலாக வேலைகளைத் தொடங்கிவிட்டதாம் அந்தத் தனியார் நிறுவனம். ‘உள்ளூர் அமைச்சரின் ஏகபோக ஆதரவு இருப்பதுதான் தனியார் நிறுவனத்தின் துணிச்சலுக்கான காரணம்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விவகாரத்தை கோட்டை வரை புகாராகக் கொண்டு சென்றிருப்பதால், ‘கொஞ்ச காலத்துக்கு மட்டும் இந்தத் திட்டத்தை நிறுத்திவைக்கலாமா?’ எனத் தனியார் நிறுவனத்துடன் ஆலோசனையில் இருக்கிறாராம் அமைச்சர்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.