சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக சுகாதார துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட நெப்போலியன், சரவணன் உள்பட 65 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், “கரோனா பேரிடர் காலங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு பணியாளர்களின் நலன்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி நிரந்தரம் வழங்கும்போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி அளித்துள்ள விண்ணப்பங்களின் மீது அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல், பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருகிறது. அதேநேரம், சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 800 ஓட்டுநர்கள் பணியிடங்களை நிரப்பவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், ஓட்டுநர் காலிப் பணியிடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக சுகாதாரத்துறையில் உள்ள 800 ஓட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்பவும், தற்காலிக ஆம்புலன்ஸ் ஓட்டுர்களை பணி நீக்கம் செய்யவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.