தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் முடிந்த பிறகும் கூட பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. சென்னை உட்பட வட தமிழகத்தின் பல இடங்களிலும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் இரவு நேரங்களிலும் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலுக்கு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து மக்கள் சற்று இளைப்பாறி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழை மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது.
ஆனாலும் தமிழகத்தின் சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றும்
தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்து தமிழ் நாடு வெதர்மேன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் கடும் வெப்பத்திற்குப் பிறகு மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ் நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு வெதர்மேனின் இந்த பதிவு மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் மற்ற தனியார் வானிலை ஆய்வாளர்களும் வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ராணிபேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய பகுதியில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
இதனிடையே இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.