சென்னை : பிரபல இயக்குநர் நாகா படப்பிடிப்பு தளத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார்.
90களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் மர்மதேசம். இதனை இயக்குநர் நாகா மற்றும் சி. ஜெ. பாஸ்கர் இயக்கியிருந்தனர். இத்தொடருக்கு இந்திரா சௌந்திரராஜன் கதை எழுதியிருந்தார்.
இந்த தொலைக்காட்சி தொடர் சன் டிவி-யில் 1995ஆம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த சீரியலை நிச்சயம் 90கிட்ஸ் மறந்து இருக்க மாட்டார்கள்.
மர்மதேசம் : குடும்ப உறவுகள், கல்யாணம், நிச்சயதார்த்தம் என குடும்ப கதைகளுக்குள் உலாவிக்கொண்டிருந்த சின்னத்திரை பிரியர்களுக்கு வித்தியாசமான ஒரு தொடராக இருந்தது மர்மதேசம் தொடர். மர்மதேசம் ஐந்து தனிக்கதைகளை உள்ளடக்கிய இந்த தொடரின் மிகப்பெரிய வெற்றிக் கதையென்றால் இரண்டாம் பாகமான விடாது கருப்பு’தான்.
25ஆண்டு விழா : விடாது கருப்பு கதையில், கருப்பசாமி என்ற கற்பனைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட விடாது கருப்பு தொடரில் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலம். அதில் வரும் கருப்பசாமியை அந்த கால நவீன தொழில்நுட்பத்தின் மூலம் திரையில் கொண்டு வந்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம தேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்ச்சியை இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.
திடீர் மாரடைப்பு : இயக்குநர் நாகா ஓடிடி தளம் ஒன்றுக்கு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சரிந்து விழுந்தார். இதைத்தொடர்ந்து பட குழுவினர் அவரை உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து இயக்குனர் நாகாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சைகள் அளித்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.