திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு காவல் நிலையத்தில் திருத்தணியைச் சேர்ந்த ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவர் புகார் மனு ஒன்றினைக் கொடுத்திருந்தார். அதில், “நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள். என்னுடைய அண்ணன் மகன் பெயர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர்கள் மூன்று பேரும் கூல்டிரிங்ஸில் பூச்சி மருந்து குடித்துவிட்டு கொசஸ்தலை ஆற்றில் விழுந்துகிடப்பதாக ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். பின்னர் மூன்று பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றோம். செல்லும் வழியில் என்னுடைய மூத்த மகள் உயிரிழந்துவிட்டாள். இளைய மகள், அண்ணன் மகன் ஆகியோர் சிகிச்சையில் இருக்கின்றனர். உயிரிழந்த என் மகளின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்.
இது குறித்து திருவாலங்காடு போலீஸாரிடம் விசாரித்தோம். “இரு சிறுமிகளும் ட்வின்ஸ். இரட்டை சகோதரிகளான இவர்கள் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, ப்ளஸ்-ஒன் செல்லவிருந்தனர். இவர்களின் உறவினர் சுரேஷ். இவர், தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். சிறுமிகள் இருவரும் அண்ணன் முறைகொண்ட சுரேஷிடம் பழகி வந்திருக்கிறார்கள். அதைப் பெற்றோர் கண்டித்ததும், இவர்கள் மூன்று பேரும் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்கள். அதில் புகாரளித்தவரின் மூத்த மகள் உயிரிழந்துவிட்டார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே, விஷம் குடித்ததற்கான காரணம் தெரியவரும். பிரேத பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் சடலத்தை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.