நினைவுப்பாதையில் ஒரு பயணம் : ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினி

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம். சமீபத்தில் சென்னையில் 'ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்' முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான 'களத்தூர் கண்ணம்மா' என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த மியூசியம் ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்களாலும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல பெருமை வாய்ந்த படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.

1983ல் தமிழில் வெளியான பாயும் புலி என்கிற படத்தில் ரஜினிகாந்த் ஓட்டிய சுசுகி RV 90, சிவப்பு நிற பழமை வாய்ந்த MG TB கார் மற்றும் 2007ல் வெளியான 'சிவாஜி ; தி பாஸ்' படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமான சிவாஜி சிலை என இவையெல்லாம் இந்த மியூசியத்தில் உள்ள கவனம் ஈர்க்கும் விஷயங்களாகும்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 7 )புதன்கிழமை ரஜினிகாந்த் இந்த மியூசியத்துக்கு வருகை தந்ததுடன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் எம்எஸ் குகன் ஆகியோருடன் இணைந்து மியூசியத்தை சுற்றிப் பார்த்தார். நினைவுப்பாதையில் ஒரு பயணமாக ரஜினி இதனை ரசித்தார். இதுதொடர்பான போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.