சென்னை:
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாக செங்கல்பட்டை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தற்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 இடங்களில் நியூ டவுன்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. நியூ டவுன் என்றால் என்ன? இதனால் அந்தப் பகுதிகளில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்படும்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப சென்னை பல ஆண்டுகளாக தொடர்ந்து விரிவுப்படுத்தப்பட்டு கொண்டே வருகிறது. ஆரம்பத்தில் வடசென்னை பகுதி தான் உண்மையான சென்னையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, மக்களின் வருகை தொடர்ந்து அதிகரித்ததால் மத்திய சென்னை, தென் சென்னை என நீண்டு தற்போது செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் வரை சென்னை விரிவடைந்துள்ளது.
இனி சென்னையின் அடுத்தக்கட்ட வளர்ச்சி கிளாம்பாக்கத்தில் இருந்துதான் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில்தான் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமான பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவிலேயே மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது.
சிட்டியாக மாறும் செங்கல்பட்டு:
இந்த சூழலில்தான், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை ஏராளமான வளர்ச்சித் திட்டங்களையும், உள்கட்டமைப்பு திட்டங்களையும் தமிழக அரசு செய்து வருகிறது. குறிப்பாக, கிண்டியில் இருந்து தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு ரூ.15.7 கோடியை அண்மையில் ஒதுக்கியது. அதேபோல, ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு வரை பல மேம்பாலங்களும் கட்ட திட்டமிடப்பட்டிருக்கின்றன.
5 பிரம்மாண்ட நியூ டவுன்கள்:
இந்நிலையில், சென்னைக்கு வெளியே பிரம்மாண்ட நகரங்களை அமைக்கும் நியூ டவுன் (New Town) என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமழிசை, திருவள்ளூர், மீஞ்சூர் ஆகிய இடங்களில் இந்த நியூ டவுன்கள் அமையவுள்ன. தற்போது செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் நியூ டவுன் அமைப்பதற்கான கன்சல்டன்சி பணிகளுக்கு டெண்டர்களை சிஎம்டிஏ வெளியிட்டுள்ளது.
பெங்களூருக்கு இணையாக..
அதன்படி, நியூ டவுன்கள் அமையவுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட மேற்குறிப்பிட்ட 5 இடங்கள் சென்னை, பெங்களூர் நகரங்களை போல தரம் உயர்த்தப்படும். அகலமான சாலைகள், குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, பெரிய மேம்பாலங்கள், உயர் கட்டிடங்கள், புதிய தொழில் நிறுவனங்கள், சென்னைக்கு விரைவாக வரும் வகையிலான சாலை இணைப்புகள் என அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்படும். அதாவது கிட்டத்தட்ட இனி இந்த இடங்கள் பெங்களூர் போன்ற நகரத்துக்கு இணையாக மாற்றப்படும். இப்போது கொல்கத்தாவில் இந்த நியூ டவுன்கள் அமைக்கப்பட்டு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
கொல்கத்தாவை போல..
எனவே கொல்கத்தாவை முன்னுதாரணமாக கொண்டு தற்போது சென்னைக்கு வெளியே இந்த நியூ டவுன்களை தமிழக அரசு அமைக்கவுள்ளது. இதற்காக மேலே குறிப்பிட்ட 5 இடங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனை சுற்றிலும் மிக பிரம்மாண்டமான நியூ டவுன்களை கட்டமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த நியூ டவுன்கள் கட்டமைக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் இங்கே வந்துவிடும். இதன் மூலம் சென்னையில் தற்போது மூச்சுமுட்டும் அளவுக்கு உள்ள மக்கள்தொகை கணிசமாக குறையும் என்பது உறுதி.