இம்பால்: மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாமல் இருந்தால் பாதிக்கப்படுகிற மைத்தேயி இன மக்களும் ஆயுதம் ஏந்துவார்கள்; குக்கிகள்- மைத்தேயி இனக் குழுவினரிடையே உள்நாட்டு யுத்தம் நிகழ்வதை தடுக்க முடியாததாகிவிடும் என மைத்தேயி பழங்குடிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மணிப்பூரில் குக்கிகள்- பழங்குடிகள் பட்டியலில் உள்ளனர்; மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க கோருகின்றனர். இதற்கு குக்கிகள் எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இன்னமும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதுவரையிலான வன்முறைகளில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் முகாமிட்டு அமைதி முயற்சிகளை மேற்கொண்டார். ,மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனாலும் மணிப்பூரில் வன்முறை தொடருகிறது. ஆம்புலன்ஸ் ஒன்றை வழிமறித்த குக்கி இன மக்கள், குழந்தை உட்பட் 3 பேரை உயிருடன் எரித்து படுகொலை செய்துள்ளது. மணிப்பூரில் பாதுகாப்பு படையினரிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்து தாக்குதல் நடத்துகின்றனர் குக்கி இனமக்கள். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் குக்கி இனக் குழுக்களுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இந்த மோதல்களில் பிஎஸ்எப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குக்கிகள் பறிமுதல் செய்த ஆயுதங்களை ஒப்படைக்க மாநில அரசுவலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மைத்தேயி பழங்குடிகள் இனத்தின் தலைவரான பிரமோத் சிங் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில், மைத்தேயி இன மக்களைப் பாதுகாக்க மத்திய அரசு தலையிட்டு உடனே வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இல்லை எனில் மைத்தேயி இன மக்கள் தங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்குவர். இதனை யாராலும் தடுத்துவிட முடியாது. இதனால் உள்நாட்டு சிவில் யுத்தம் வெடிக்கும் நிலைமைதான் ஏற்படும். இந்த உள்நாட்டு யுத்தம் என்பது மைத்தேயி இன மக்களின் பாதுகாப்புக்காகத்தான். மணிப்பூர் அரசாங்கம் இதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றார்.