புதுடெல்லி: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குரைச் சந்தித்து பேசிய மல்யுத்த வீராங்கனைகளும் வீரர்களும், அவரிடம் 5 நிபந்தனைகளை வைத்துள்ளனர்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று இரவு வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில், “மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினை தொடர்பாக அவர்களுடன் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று டெல்லியில் உள்ள அனுராக் தாக்குரின் இல்லத்துக்கு மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சென்றனர்.
மல்யுத்த வீராங்கனைகளின் 5 நிபந்தனைகள்: அனுராக் தாக்குரை சந்தித்துப் பேசிய அவர்கள் முன்வைத்த 5 நிபந்தனைகள்:
- மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும்
- மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
- தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்
- மல்யுத்த கூட்டமைப்பில் பிரிஜ் பூஷன் சிங்கின் குடும்பத்தினர் யாரும் இடம்பெறக் கூடாது
- கடந்த 28ம் தேதி நடந்த போராட்டத்தை அடுத்து தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்
இந்த 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்தச் சந்திப்பில் வினேஷ் போகத் இடம்பெறவில்லை. ஹரியாணாவில் உள்ள அவரது சொந்த கிராமமான பலாலியில் நடைபெறும் பஞ்சாயத்தில் பங்கேற்க அவர் சென்றிருப்பதால் இந்தச் சந்திப்பில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஞ்சரங் புனியா உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 28-ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பின்னர், தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாகக் கூறி ஹரித்துவார் சென்றனர். விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று, பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவை மாற்றிக் கொண்டு, மத்திய அரசுக்கு 5 நாள் கெடு விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.