ஈரோடு மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாசப்பகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (40). இவரது மனைவி மகேஸ்வரி (35). இந்நிலையில் மோகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மகேஸ்வரி அதை கண்டித்துள்ளார். இதனால் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மகேஸ்வரி கணவரை பிரிந்து சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து தொட்டம்பாளையத்தில் உள்ள தறிப்பட்டறையில் தங்கி நெசவுத் தொழில் செய்து வந்த மோகன், மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை தறிப்பட்டறை உரிமையாளர் வந்து பார்த்தபோது மோகன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.