மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி'. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வரும் 23ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் சங்கையாக பேசியதாவது:

இந்த படத்திற்கு நான் மம்முட்டி அல்லது பசுபதி என இரண்டு பேரை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். மம்முட்டியை பிடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு பசுபதி கிடைத்து விட்டார். ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு விஷயத்திற்காக நடிக்க கூடியவர்கள். ஆனால் பசுபதி திரைக்கதைக்காக நடிப்பவர். கலைத்துப் போடப்பட்ட இந்த படத்தின் திரைக்கதையில் நேர்கோடான நடிப்பை அவர் வழங்கியுள்ளார். அவர் நடித்த படங்களில் மிகச் சிறந்ததாக இந்த படம் இருக்கும்.

ஒரு படத்தில் வடிவேலு சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என காமெடி செய்திருப்பார். அதுபோல இந்த படத்தில் நடிகை ரோகிணி பிணமாக அமர்ந்தபடி மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரை சுற்றி இருப்பவர்கள் வெவ்வேறு விதமான நடிப்பு, கூச்சல் என்று இருந்தாலும் சில இடங்களில் நான் கட் சொல்ல மறந்து விட்டாலும் கூட அவர் மூச்சை பிடித்துக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே கவனம் கொண்டிருந்தார். அம்மு அபிராமி இந்த படத்திற்கு ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். ஆனால் இரவு பகலாக நடித்து இரண்டே நாட்களில் அவரது வேலையை முடித்து விட்டார்.

இந்த படத்தில் நடித்துள்ள தண்டட்டி அப்பத்தாக்கள் படப்பிடிப்பிலும் சரி டப்பிங்கிலும் சரி என்னை மிகவும் துன்புறுத்தினார்கள். நான் படப்பிடிப்பில் அவர்களை திட்டுவேன். ஒரு குழந்தை போல என்னிடம் கோபித்துக் கொண்டு ஓரமாக அமர்ந்து விடுவார்கள். பின்னர் அவர்களை சமாதானம் செய்து நடிக்க வைப்பேன். இந்த படத்திற்காக கிராமங்களில் சில வீடுகள் தேவைப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் கதை சொல்லி வீடு கேட்போம். அவர்கள் வீடு கொடுப்பதற்கு முன்பே ஒப்பாரி வைக்கும் காட்சிகள் ஏதும் இருக்கிறதா என்று விசாரித்து விட்டுதான் அனுமதி கொடுத்தார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.