தமிழகத்தில் மின் கட்டணம் தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு தான் பேசுபொருளாக மாறியிருக்கிறது. நல்ல வேளையாக வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு
ஆனால் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை கட்டணம் உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை பிடித்து கொண்டு அரசியல் கட்சிகள் எதிர்க்குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பாதிப்பில் இருந்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளமுடியாத சூழலில்,
பொதுமக்கள் மீது தான் விழும்
தற்போது மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படிருப்பது கண்டிக்கத்தக்கது. தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்படும் மின் கட்டணத்தால் ஏற்படும் பாதிப்பு அந்நிறுவனங்களுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. உற்பத்தி பொருட்கள், சேவைகள் ஆகியவற்றை சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்களான பொதுமக்கள் மீதுதான் மின் கட்டண உயர்வை தொழில் நிறுவனங்கள் சுமத்தும்.
மீள முடியாத சிறு தொழில் நிறுவனங்கள்
எனவே இந்த மின் கட்டண உயர்வு நேரடியாக பொதுமக்களையே பாதிக்கும் என்பது விடியா திமுக அரசுக்கு புரியாதா? மேலும், கடந்த ஆண்டு மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை போன்ற தொழில் நகரங்களில் உள்ள பெரும்பாலான சிறுதொழில் நிறுவனங்கள் இன்னும் அவற்றில் இருந்து மீள முடியாத நிலையில், மின் கட்டண உயர்வு தொழில் நிறுவனங்களை மேலும் கடுமையாக பாதிக்கும்.
நஷ்டத்தில் மின்சார வாரியம்
மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற காரணத்தைக் கூறாமல், மின் கொள்முதல், நிலக்கரி கொள்முதல், வீடு, தொழிலக மின் இணைப்பு வழங்குதல் போன்றவற்றில் நிலவுவதாக சொல்லப்படும் முறைகேடுகளை முற்றிலும் களைந்து சீர்திருத்தம் செய்தாலே மின்வாரியம் லாபத்தை நோக்கி செயல்பட முடியும். அதை விடுத்து அவ்வப்போது மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வாழ்வை இருளில் தள்ளுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஈஸ்வரன் கோரிக்கை
எனவே, தற்போது அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதேபோல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிறு தொழிற்சாலைகள் லாபம் ஈட்டுவதில்லை என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு நஷ்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டண உயர்வு மேலும் நஷ்டத்தை அதிகரிக்கும். இதை புரிந்து கொண்டு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்து முதலமைச்சர்
உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.